தமிழகம்

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா?- இதைக் கொஞ்சம் படியுங்கள்...

செய்திப்பிரிவு

அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? உடலில் உள்ள கழிவு வெளியேறுகிறது என்ற எண்ணத்தில், இதை அலட்சியப்படுத்திவிடாதீர்கள். இது புரோஸ்டேட் பிரச்சினையாகவும் இருக்கலாம்” என்கிறார் கோவையைச் சேர்ந்த சிறுநீரக நிபுணர் டாக்டர் கே.செந்தில். அவரிடம் பேசினோம்.

“பொதுவாக புரோஸ்டேட் சுரப்பிகள் பெரிதானால், பல பிரச்சினைகள் உருவாகும். சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். பிராஸ்டேட் சுரப்பி என்பது ஒரு மிகச் சிறிய உறுப்பு. சிறுநீர்ப் பைக்கு சற்று கீழே அது இருக்கிறது.

வயது, வானிலை மாற்றம், பயணம் தொடர்பான மன அழுத்தம், வெவ்வேறு இடங்களின் நீர் அருந்துதல் உள்ளிட்டவை இந்நோய்க்கு காரணங்களாகும். எனினும், உடல் உழைப்பு குறைவான வாழ்க்கை முறை, வயது ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன.
புரோஸ்டேட் விரிவாக்கம் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிறது. புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா (பிபிஹெச்), நுண்ணிய, அதிகப்படியான வளர்ச்சியால் வரையறுக்கப்படுகிறது, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு விரிவடைகிறது. 8 சதவீத ஆண்கள் 45 வயதிலும், 50 சதவீதம் பேர் 60 வயதிலும், 90 சதவீதம் பேர் 90 வயதிலும் நுண்ணிய பிபிஹெச் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் பிபிஹெச் பாதிப்பு 40-49 வயதினருக்கு 25 சதவீதம், 50–59 வயதினக்கு 37 சதவீதம், 60-69 வயதினருக்கு 37 சதவீதம், 70–79 வயதினருக்கு 50 சதவீதமாகும். ஒவ்வொரு 5 இந்திய ஆண்களில், இருவருக்கு பிபிஹெச் காரணமாக குறைந்த சிறுநீர் பாதை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.ஆனாலும், பெரும்பாலானோர் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதில்லை. நோய் கடுமையாகும்வரை அதைப்பற்றிக் கவலை கொள்வதில்லை.

நோயாளிகள் பொதுவாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர்ப்பை முழுமையடையாதது குறித்து புகார் கூறுவார்கள். தண்ணீர் அருந்துவதைக் கட்டுப்படுத்தல், எங்கு சென்றாலும் கழிப்பறையைத் தேடுவது, நீண்ட பயணங்களுக்குச் செல்வதற்கு முன் சிறுநீர் கழித்தல் போன்றவை மூலம் சமாளித்துக் கொள்கிறார்கள். உரிய
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிறுநீர் பிரச்சினைகள் உருவாகி, ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

எனவே, மருத்துவரை அணுகுவது முக்கியமானது. குறிப்பாக, பிரச்சினை பற்றி வெட்கப்படக்கூடாது. மேலும், பிபிஹெச் அறிகுறிகள் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயையும் உருவாக்கும். சில பரிசோதனைகள் மூலம் பிபிஹெச் நோயின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் கூட சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பதாக உணர்தல், சிறுநீர் கழிக்க காத்திருக்க முடியாதது, பலவீனமான சிறுநீர் ஓட்டம், சொட்டுசொட்டாக சிறுநீர் கழித்தல், பலமுறை நிறுத்தி சிறுநீர் கழிக்கத் தொடங்க வேண்டிய அவசியம், சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிக்கல், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாதீர்கள். மருத்துவரை அணுகுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புரோஸ்டேட் சுகாதார மாதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார் டாக்டர் கே.செந்தில்.

SCROLL FOR NEXT