தமிழகம்

அலங்காரப் பூக்கள் விற்பனை 40 சதவீதம் சரிவு; சீன பிளாஸ்டிக் பூக்களால் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு 

செய்திப்பிரிவு

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

இந்தியாவில் சீன பிளாஸ்டிக் பூக்கள் வரத்தால் அலங்காரப் பூக்களின் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 70 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஆஸ்டர் உள்ளிட்ட 300 வகையான அலங்காரப் பூக்கள் சாகுபடி ஆகின்றன.

தமிழகத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் பசுமைக் குடில், திறந்த வெளியில் அலங் காரப் பூக்கள் உற்பத்தி ஆகின்றன. கிருஷ்ண கிரி மாவட்டத்தில் அதிகபட்சம் 3 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடைபெறுகிறது.

2015-ம் ஆண்டு வரை ரோஜா, ஆஸ்டர், ஜெர்பரா உள்ளிட்ட மலர் ஏற்றுமதியும், உள்நாட்டு சந்தை நிலவரமும் சிறப்பாக இருந்தது. தற்போது, இந்த மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையும் குறைந்துவிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது, தற்போது 40 சதவீதம் இயற்கை முறையில் உற்பத்தியாகும் அலங்கார மலர் விற்பனையும் சரிந்துள்ளது. அதனால், இந்த மலர் சாகுபடிக்காக கடன் பெற்று பசுமைக் குடிலில் சாகுபடி செய்யும் விவசாயிகளால் வங்கிக் கடனைச் செலுத்த முடியவில்லை.

இதுகுறித்து அகில இந்திய மலர் உற் பத்தியாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, ஓணம் உள்ளிட்ட விழாக்களில், வீட்டு நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளில் பூ அலங்காரம் அதிக மாக இருக்கும். தற்போது, இந்த விழாக் களுக்கு 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பிளாஸ்டிக் பூ அலங்காரம் செய்கிறார்கள். சீனாவில் இருந்து அதிக அளவு பிளாஸ்டிக் பூக்கள் இந்திய சந்தைகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக் மலர் வருகையால் ஓர் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓசூரில் மட்டுமே ஆண்டுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சீன பிளாஸ்டிக் மலர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் கலப்பதால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இந்தியாவுக்கு 90 சதவீத பிளாஸ்டிக் பூக்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2 சதவீதம் பாங்காங், தாய்லாந்தில் இருந்து வருகின்றன.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் இந்தப் பட்டியலில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அலங்காரப் பூக்கள் இடம் பெறவில்லை. அலங்காரப் பூக்கள் விலையும், பராமரிப்புச் செலவும் குறைவு என்பதால், இந்த பூக்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஹோட்டல்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்கள் அலங்காரத்தை 3 நாள், 5 நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால், பிளாஸ்டிக் பூக்கள் அலங்காரம் 3 மாதம் முதல் 6 மாதம்வரை அப்படியே இருக்கும். ஒருஜெர்பரா பிளாஸ்டிக் பூவை 3 ரூபாய்க்கு வாங்கி 25 நிகழ்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். ஆனால், பிளாஸ்டிக் பூக்களால் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் ஆபத்து ஏற்படும். அதனால், மக்களும் பிளாஸ்டிக் பூக்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பூக்களை தடை செய்யக் கோரி நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தோம். ஓசூரிலும் ஆர்ப்பாட்டம் செய் தோம். அடுத்து, பெங்களூரு, பஞ்சாபில் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT