நாமக்கல்
மணல் லாரி விவகாரத்தில் நாமக்கல் எம்.பி. சின்னராசு வரம்பு மீறிச் செயல்படுகிறார் என்று அமைச்சர் தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிபாளையத்தில் முதல்வர் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மணல் லாரி ஓட்டுநரையும் காவலர்களையும் நாமக்கல் எம்.பி. சின்னராசு மிரட்டியுள்ளார். காவல் நிலையத்துக்குள் நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு இல்லை.
புதுச்சேரியில் இருந்து அரசு குவாரியில் மணல் வந்தது. சோதனையில் முறைகேடாக, திருட்டுத் தனமாக மணல் கொண்டுவரப்பட்டதை அறிந்து, உடனடியாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் சட்ட, விரோத செயல்கள் எதுவானாலும் அதைக் கண்டிக்க அவருக்கு உரிமை உள்ளது. ஆனால் காவல் நிலையத்துக்குள் தனது ஆட்களை அழைத்துச் சென்று, மணல் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரை நானே விசாரிக்க வேண்டும் என்று சின்னராசு கூறியுள்ளார்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு அழகல்ல. சட்டம் தனது கடமையைச் செய்யும்'' என்று அமைச்சர் தங்கமணி.