திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தின் அடவிநயினார் கோயில் அணை நிரம்பியதால் அணை பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை ஆறுதல் அளிக்கும் வகையில் நன்கு பெய்தது. இதனால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
குண்டாறு அணை, கொடுமுடியாறு அணை, கருப்பாநதி அணை, ராமநதி அணை ஆகிய 4 அணைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து நிரம்பின.
இந்நிலையில், 133.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோயில் அணை இன்று(வெள்ளிக்கிழமை) முழுமையாக நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேறியது. அடவிநயினார் கோயில் அணை நிரம்பியதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடவிநயினார் கோவில் அணையின் மொத்த கொள்ளளவு 174 மில்லியன் கனஅடி. கொடுமுடியாறு அணையின் மொத்த கொள்ளளவு 121.84 மில்லியன் கனஅடி. முழுமையாக நிரம்பிய இந்த 2 அணைகளில் மட்டுமே முழு கொள்ளளவுக்கு நீர் இருப்பு உள்ளது.
தூர்ந்து கிடக்கும் ராமநதி அணையின் மொத்த கொள்ளளவு 152 மில்லியன் கனஅடி. இந்த அணை முழுமையாக நிரம்பினாலும் 112 மில்லியன் கனஅடி அளவுக்கே நீர் உள்ளது.
இதேபோல், 185 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையில் 118 மில்லியன் கனஅடி அளவுக்கே நீர் உள்ளது. 26 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 18.50 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. இந்த 3 அணைகளிலும் சுமார் 115 மில்லியன் கனஅடி நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. வரும் கோடைக் காலத்திலாவது அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் கோயில் அணையில் 30 மி.மீ., குண்டாறு அணையில் 14 மி.மீ., பாபநாசத்தில் 7 மி.மீ., கருப்பாநதி அணையில் 2 மி.மீ., சேர்வலாறில் 1 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 108.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.76 அடியாகவும் இருந்தது. இந்த அணைகளுக்கு விநாடிக்கு 1271 கனஅடி நீர் வந்தது. 1405 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 54.35 அடியாக இருந்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.