பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

அட்சயபாத்திரம் திட்டம் புதுச்சேரி பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் தொடக்கம்: வாரம் இருமுறை முட்டை; அமைச்சர் கமலக்கண்ணன்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

அட்சயபாத்திரம் திட்டம் புதுச்சேரி பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கும்; காலையிலேயே வாரம் இருமுறை அவித்த முட்டைகள் தரப்படும்; விருப்பப்பட்டால் மிளகுதூள் தூவியும் போட்டு தரப்படும் என்று சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆக.30) கேள்வி நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா பேசுகையில், "புதுச்சேரியில் மதிய உணவு தர அட்சயபாத்திரம் திட்டம் எப்போது செயல்படும்?" என்று கேட்டார்.

அதற்கு கல்வியமைச்சர் கமலக்கண்ணன், "அட்சயபாத்திரம் திட்டத்துக்காக ஒப்பந்தம் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்தானது. நிர்வாக காரணங்களால் இந்த கல்வியாண்டில் ஆரம்பிக்க முடியவில்லை. வரும் கல்வியாண்டில் தொடங்குவோம். 11 மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுகிறது.

பெங்களூருவுக்கு நேரடியாக சென்று பார்த்து தான் ஒப்புதல் தந்தோம். அரசுக்கு ரூ. 4 கோடி வரை சேமிக்க முடியும்.காரைக்காலில் அமல்படுத்த தற்போது உத்தேசமில்லை" என்று குறிப்பிட்டார்.

அதற்கு எம்எல்ஏ சந்திரபிரியங்கா, "சைவ உணவுதான் இத்திட்டத்தில் தரப்படும். குழந்தைகளுக்கு முட்டை தொடர்ந்து போடப்படுமா?" என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் கமலக்கண்ணன், "வாரம் இரு முறை காலையில் முட்டையை அவித்து குழந்தைகளுக்கு தருவோம். காலை உணவுத்திட்டத்தில் நாங்கள் கண்டிப்பாக முட்டை தருவோம். விருப்பப்பட்டால் மிளகு தூள் போட்டு தருவோம்" என்று பதிலளிக்க அவையில் சிரிப்பு எழுந்தது.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT