தமிழகம்

17 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வரவில்லை: விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 17 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்துசேரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. அங்கு வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னதாக நின்று, விவசாயிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி நீர் கடைமடை வரை வந்து சேரவில்லை என்பதால், கூடுதலாக மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும், ஏற்கெனவே உள்ள கடன்களுக்கு மேற்கொள்ளப்படும் ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்காகத் தலைகீழாக நின்றும், வாயில் எலியைக் கவ்வியவாறும் கழுத்தில் கத்தியை வைத்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது முதற்கட்டப் போராட்டம்தான் எனவும் இது தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

என்ன காரணம்?

தமிழக முதல்வர் திறந்து வைத்த மேட்டூர் அணையில், 10 ஆயிரம் கன அடி நீர் என்ற அளவிலேயே திறக்கப்பட்டுள்ளதாகவும், கடைமடைப் பகுதிகளில் சரியாகத் தூர் வாராததால், தண்ணீர் முழுமையாகச் சென்று சேரவில்லை என்றும் விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

காவிரி நீர்ப்பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள நிலங்கள் வறண்டு கிடப்பதாகவும் சம்பா சாகுபடிக்குக் கூடுதல் நீர் தேவை என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேபோல திருவாரூரில், 17 நாட்கள் ஆகியும் ஆறுகளில் காவிரி நீர் வந்து சேரவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அங்குள்ள 27 ஆறுகளில் 26 ஆறுகளில் தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT