தங்க தமிழ்ச்செல்வன்: கோப்புப்படம் 
தமிழகம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் மர்மம்; ஓரிரு நாட்களில் ஊடகங்களிடம் தெரிவிப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்

செய்திப்பிரிவு

சென்னை

முதல்வர் பழனிசாமி எதற்காக வெளிநாடு சென்றார் என்பதை ஓரிரு நாட்களில் ஊடகங்களிடம் தெரிவிப்பேன் என, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனை இன்று (ஆக.30) திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டார். அதன்பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"பொதுவாகவே மாற்றுக் கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு இம்மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படும்போது விமர்சனங்கள் வருவது இயல்பு. ஆனால், செயல்பாடு உள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த மிகப்பெரிய பதவியை எனக்குக் கொடுத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பலரும் என்னிடம் பேசுகின்றனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். நிச்சயமாக இது நல்லதொரு வளர்ச்சியைத் தான் காட்டும். பின்னடைவை காட்டாது.

ஜெயக்குமார் விமர்சனம்

என்னுடைய கொள்கை தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. தமிழக உரிமைகள், தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை ஸ்டாலினால் மட்டும்தான் செய்ய முடியும். திமுக கொள்கைகளைப் பரப்புவதற்காக தமிழகம் முழுவதும் பயணிப்பேன். எதையெடுத்தாலும் விமர்சனம் செய்யக்கூடிய நிலைமைக்கு அமைச்சர் ஜெயக்குமார் வந்துவிட்டார். ஆடு நனைகிறது என்பதற்காக ஓநாய் கவலைப்படக் கூடாது. திமுகவினர் பாராட்டும் போது அதிமுகவினர் வருத்தப்படுவதாக சொல்வதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு உரிமை இல்லை. இது தேவையில்லாத பேச்சு. அவரின் பதவிக்கு அழகல்ல.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்:

இணையம் வளர்ந்துவிட்ட யுகத்தில் முதல்வர் லண்டன் சென்று அமெரிக்கா செல்வதன் பின்னணியில் விஷயம் இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் எதற்கு வெளிநாட்டுக்கு சென்றார் என்பதை ஊடகத்திடம் நாங்கள் சொல்வோம். அவரின் பயணத்தில் மர்மம் இருக்கிறது. வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டின் நிலைமையை சரிசெய்யாமல், முதலீட்டாளர்களுக்காக லண்டன், அமெரிக்கா சென்றதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், அவரின் உடை மாற்றத்தை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரின் உடை மாற்றம் நன்றாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். செயற்கையாக இருக்கிறது. ஏன் வேட்டி கட்டிக்கொண்டு கையெழுத்துப் போட மாட்டாரா? அவர் ஏன் வெளிநாடு சென்றார் என்பது குறித்த சில கருத்துகள் எனக்கு வந்திருக்கின்றன. தெளிவாக தெரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்துவேன்", என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT