தமிழகம்

ஜெமினி - அண்ணா சிலை: அண்ணா சாலை இருவழி பாதை: மேலும் சில வாரம் நீடிக்கும் பணி

செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் பணிக்காக ஒருவழியாக்கப்பட்ட ஜெமினி-அண்ணா சிலை வரையிலான அண்ணா சாலை மீண்டும் இருவழிப்பாதை ஆக சில வாரங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அண்ணா சாலை பகுதியில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்காக, எல்ஐசியில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் அண்ணா சாலை மூடப்பட்டு 8 ஆண்டுகளாக ஒருவழிப்பாதையாக இயக்கப்படுகிறது.

படிப்படியாக பணிகள் முடிய ஜெமியிலிருந்து நந்தனம் வரையிலான ஒருவழிப்பாதை பழையபடி இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு 6 மாதங்கள் கடந்தப் பின்னரும் அண்ணா சாலையின் ஒரு பகுதி ஒருவழிப்பாதையாகவே உள்ளது.

அண்ணா சாலையில் பாரிமுனை, வாலாஜா சாலை, எழும்பூரிலிருந்து ஆயிரம் விளக்கு ஜெமினி மேம்பாலம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் இடதுபுறமாக திருப்பி விடப்படுகிறது, ஜிபி சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர், ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையைச் சென்றடைகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக இதேப்போன்றுதான் இயக்கப்படுகிறது. காரணம் மெட்ரோ ரெயில் பணிகள். இதனால் வாகன ஓட்டிகள் அதிக தூரம் கடக்க வேண்டியிருந்தது. ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணா சாலை மார்க்கத்தில் மெட்ரோ சுரங்கப் பாதை பணிகள் கடந்த பிப்ரவரி மாதமே முடிந்தாலும் இங்கு மட்டும் சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படவில்லை.

சாலையை முழுதுமாக போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாற்றி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. மெட்ரோ நிர்வாகத்தினர் போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் முழுவதுமாக முடிப்பதில் வேலைகள் பல இடங்களில் முடியாததால் இன்றுவரை சாலை இருவழிச்சாலையாக மாற்றப்படவில்லை.

இந்நிலையில் மீதமிருக்கும் மெட்ரோ ரெயில் ஸ்டேஷன்களை ஒட்டிய பகுதிகள், சாலைகளை சீரமைக்கும் பணியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கும்பட்சத்தில் அவர்கள் சாலையின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைப்பார்கள்.

போக்குவரத்து போலீஸார், சாலைத்தடுப்பு, பாதசாரிகள் சாலையை கடக்கும் வழி, சிக்னல்கள் உள்ளிட்டவற்றை சரி செய்தப்பின்னர் போக்குவரத்தை இருவழிப்பாதையாக மாற்றுவார்கள் என தெரிகிறது. இதற்கு மேலும் சில வாரங்கள் ஆகும் என தெரிகிறது.

சாலையை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்து எங்களிடம் ஒப்படைத்தப்பின், சாலையைச் சீரமைத்து ஒப்படைத்த பிறகு அண்ணசாலை இருவழிச் சாலையாக மாற்றுவது குறித்து ஒத்திகை பார்க்கப்படும். பொதுமக்கள் கருத்தும் கோரப்படும். அதனடிப்படையில் அண்ணாசாலை இருவழிப் பாதையாக செயல்படும் என போக்குவரத்து போலீஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT