தமிழகம்

இதுவரை ஆர்பிஐ உபரி நிதியை காங்கிரஸ் வாங்கியதே இல்லை: பாஜக வாங்கியது தவறான முன்னுதாரணம்: கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

சென்னை

காங். வாங்காத ஆர்பிஐ உபரி நிதியை பாஜக வாங்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி கையிருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி வாரியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் பொருளாதார சுழற்சி நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படும் என நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''பண வீக்கத்துக்குக் காரணம் காங்கிரஸ் அல்ல; ரிசர்வ் வங்கியிடம் இருந்து காங்கிரஸ் உபரி நிதியை இதுவரை வாங்கியதில்லை.

அதாவது ரிசர்வ் வங்கி, அரசுக்குத் தரவேண்டிய பங்குத் தொகையை வாங்கி இருக்கிறார்களே ஒழிய, உபரி நிதியை இதுவரை வாங்கியதில்லை. பாஜகதான் இதை முதன்முதலில் வாங்கியுள்ளது.

உபரி நிதி எப்போது வாங்கப்பட வேண்டும்? பஞ்சம் வந்தாலோ, யுத்தம் வந்தாலோ வாங்கலாம். அரசின் அன்றாடச் செலவுகளுக்கு உபரி நிதியை வாங்கக் கூடாது.

சிதம்பரம் திறமையானவர் என சிபிஐ கிண்டல் செய்வது நியாயமில்லை. வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, முதலீட்டோடு வந்தால் பாராட்டுகிறோம். ஏற்கெனவே நடந்த முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்''

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT