சென்னை
தமிழக அரசின் செந்தமிழ் அகர முதலித் திட்ட இயக்குநரகம் மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைந்து நடத்திய அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கத்தில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசும்போது, ‘‘சொற்குவை திட்டத்தின்கீழ் புதிய தமிழ் சொற்களைக் கண்டறியும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லூரி மாணவர்களு டன் இணைந்து 5,000 புதிய தமிழ் சொற்களைக் கண்டறிய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தில்கூட ஒரு லட்சத்து 71 ஆயிரம் சொற்கள்தான் தனித்துவம் மிக்க வையாக ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழில் 4 லட்சத்து 10 ஆயிரம் சொற்கள் தனித்துவம் மிக்க வையாக உள்ளன. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழை கல்லூரி மாணவர்களிடம் கொண்டு செல்வ தற்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் வெ.இறையன்பு, அகரமுதலித் திட்ட இயக்குநர் தங்க.காமராசு உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘அடுத்த உலகத் தமிழர் மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. ஆளுநர் மாளிகையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுக்கு முக்கியத்து வம் தரப்படுகிறது. அங்கு தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப் படுகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆளுநரின் செயலர் ராஜ கோபால்தான். அவர் பாரதிதாசன் பல்கலைக்கு செல்வதும் பயன் தரக்கூடியதாகவே இருக்கும். 3-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2020-21-ம் ஆண்டுக்குள் நடத்தப்படும். அதில் ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.