தேனி
தேனி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் விளையாட்டு மைதானம் நிறுவ நடவடிக்கை எடுப்பேன் என்று தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கல்வி மாவட்ட அளவிலான இப்போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் ரவீந்திரநாத் இன்று கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அவர் விழாவில் பேசி, பரிசுகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ரவீந்திரநாத் கூறும்போது, ''தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விளையாட்டு மைதானம் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன்.
விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்கள் ஊக்குவிக்க முயற்சிகள் எடுக்கப்படும். தேனி தொகுதியின் வளர்ச்சிக்காக தனி விளையாட்டு அகாடமி உருவாக்கப்படும்.
இங்குள்ள விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் அகாடமியில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம். விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்.