சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு மழை குறைந்தே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எங்கும் கனமழை பதிவாகவில்லை. மழை பெய்யும் பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பல நகரங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் ந.புவியரசன் கூறியதாவது: தமிழகத்தில் காற்று சுழற்சியோ, காற்றில் நிலவும் வேகமாறுபாடோ, வெப்ப சலனமோ எதுவும் இல்லை. மேலும் தென்மேற்கு பருவக் காற்று வலுவிழந்திருக்கும் காலமாக தற்போது உள்ளது. இதன் காரணமாக வானில் மழை மேகங்கள் உருவாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தெளிவான வானமாக இருப்பதால், வெப்பம் அதிகரிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட் களுக்கு மழை குறைவாகவே இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 100 டிகிரியை விட அதிகம் பதிவாகும் பட்சத்தில் வெப்ப சலன மழையை எதிர்பார்க் கலாம். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். மழைக்கு வாய்ப்பில்லை.
புதன்கிழமை காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செமீ, கோவை மாவட்டம் சின்னகள்ளாரில் 3 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.