சென்னை
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட ஆட்சிப்பணி தேர்வுக்கான முதல் நிலைத்தேர்வு அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் நடப்பதால் ஆர்வமுள்ள பட்டதாரிகள் அரசின் ஆட்சிப்பணி தேர்வு உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என அத்துறைக்கான அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆட்சிப்பணிக்கான முக்கிய அரசுத்தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு அடிப்படை பயிற்சியும் தேர்வை எதிர்கொள்ள தயார்ப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.
குறைந்தப்பட்சம் பட்டப்படிப்பு, சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம், விடாமுயற்சி, தகுந்த பயிற்சி நிறுவனம், வழிகாட்டி ஆகியோர் தேவை. முதல் நிலைத்தேர்வுக்கு (Preliminary Examination) கடுமையாக பயிற்சி எடுக்கவேண்டும்.
அதில் தேர்ச்சி பெற்ற பின்னர் முதன்மைத்தேர்வு நடக்கும் (mains) . அதிலும் தேர்ச்சிப் பெற்ற பின்னர் நேர்முகத்தேர்வு பின்னர் அதில் தேர்வானால் அதுதான் இறுதித் தேர்வு. பின்னர் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.
மொத்தம் ஆண்டுக்கு 900 ஆட்சிப்பணிகளுக்கான தேர்வில் லட்சக்கணக்கில் இந்தியா முழுதும் எழுதுகின்றனர்.
சமீப ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு ஆகிறார்கள். சென்னையில் அரசு சார்பில் இதற்கான ஆறு மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் தேர்வாகும் நபர்கள் 6 மாதகாலம் உணவு மற்றும் ஹாஸ்டல் வசதியுடன் பயிற்சியளிக்கப்படுகிறது.
இதற்காக இந்த ஆண்டு பயிற்சிக்காக விண்ணப்பிக்க பணியாளர் நிர்வாகத்துறையின் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு.
“ ஐஏஎஸ்/ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமைப் பணிகளில் சேர மத்திய தேர்வாணைக் குழு முதல் நிலைத் தேர்வுகளை (Preliminary Examination ) 31.05.2020 –ல் நடத்தவுள்ளது. இத்தேர்வுகளில் வெற்றி ஈட்ட, தமிழ் நாட்டை சேர்ந்த பட்டதாரி/முதுநிலை பட்டதாரிகட்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி, ஆறுமாத கால உண்டு உறைவிடப் பயிற்சியை அளிக்கிறது.
இப்பயிற்சி சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில்’ அளிக்கப்படும்.
ஆர்வமும், தகுதியும் உள்ள தமிழக இளைஞர்கள் இப்பயிற்சினைப் பெற்று, வெற்றி பெற நான் அன்போடு அழைக்கிறேன். இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு 13.10.2019 அன்று தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும். இணையதள வழி விண்ணப்பிக்க கடைசி நாள் 16.09.2019 (பிற்பகல் 6 மணி) ஆகும்.
கூடுதல் தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.