சென்னை
ஸ்டாலினைப் போல் சொத்து வாங்க முதல்வர் வெளிநாடு போகவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் சென்னை, ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''தமிழகத்துக்கு வெளிநாட்டில் உள்ள பெரு நிறுவனங்களின் முதலீடு தேவைப்படுகிறது. தொழில் முதலீடு வருவதற்காகவே முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் என்பது அவர்கள் சம்பாதித்த சொத்துகளை அங்கங்கே முதலீடு செய்யவே. அங்கே ஓட்டல்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வளாகங்கள் என வெளிநாடுகளில் கட்டுவார்கள். இதெல்லாம் அவர்களுக்குக் கைவந்த கலை'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
முன்னதாக வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து ஸ்டாலின் கூறும்போது, ''என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாமே வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறைப் பயணமாகப் போவதை எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.