தமிழகம்

லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் வழக்கு: தெலங்கானா போலீஸ் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பி புகாரை தெலங்கானா போலீஸார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி- முருகன் பாலியல் தொல்லை தருவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் எழுப்பினார். இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி.-யையும், தன்னையும் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யக்கோரி பெண் எஸ்.பி. வழக்கு தொடர்ந்தார். உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள டிஜிபி அமைத்த உட்புகார் விசாராணை குழு, ஐ.ஜி.-க்கு எதிரான புகாரை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரைத்தது.

அதன்பின்னர் பல்வேறு கட்டங்களை தாண்டி வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்தது. இடையில் ஸ்டேட்டஸ் கோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வழக்கு வினித் கோத்தாரி தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வழக்கு கடந்த 13-ம் தேதி மீண்டும் புதிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ஐஜி அந்தஸ்திற்கு மேலான கூடுதல் டிஜிபி, டிஜிபி ஆகியோரின் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டும், அதில் பெண் எஸ்.பி. ஆட்சேபம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதனையேற்ற நீதிபதிகள், இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால் உட்புகார் குழுவிடம் கொடுத்த புகார் மற்றும் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு இரண்டையும் டெல்லிக்கு மாற்றலாம் என யோசனை தெரிவித்தனர். போக்குவரத்து சிரமமாக இருக்கும் பட்சத்தில் அருகிலுள்ள மாநிலத்திற்கு மாற்றலாம் எனவும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த யோசனை குறித்து அரசிடம் விளக்கம் பெற்று மனுவாக தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். மேலும், ஐஜி தரப்பிலும் மற்றும் பெண் எஸ்.பி. தரப்பிலும் இதுகுறித்த விளக்கத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைத்தனர்.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வேறு மாநிலத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டாமென தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற பெண் நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.அ. அதிகாரி தலைமையில் விசாரணையை நடத்த உத்தரவிடலாம் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஐஜி தரப்பில் விசாரணையை தமிழகத்திலேயே நடத்த வேண்டுமெனவும், பெண் எஸ்.பி. தரப்பில் கேரளா அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கில் ஆகஸ்ட் 28 (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

இன்று இந்த வழக்கில், உட்புகார் விசாரணை குழுவிடம் பெண் எஸ்.பி. கொடுத்த புகாரும், அதனடிப்படையில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு இரண்டையும் தெலுங்கானா காவல்துறை விசாரிக்க வேண்டும். வழக்கு ஆவணங்களை உடனடியாக தமிழக தலைமை செயலாளர் அனுப்ப வேண்டும்.

அவற்றை பெற்று பிறகு தெலுங்கானா தலைமை செயலாளர், டிஜிபி-க்கு ஆவணங்களை மாற்றி மூத்த பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால் தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு இதுவரை நடந்தது விபரம் :

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி- முருகன் பாலியல் தொல்லை தருவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் எழுப்பினார். இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை என்பது பொதுத்துறையின் கீழ் வருவதால், உள்துறையின் கீழ் செயல்படும் டிஜிபி அலுவலகம் அமைத்த உட்புகார் குழு தனக்கு எதிரான புகாரை விசாரிக்க முடியாது என்றும், அதன் பரிந்துரையிலான சிபிசிஐடி விசாரணையை ரத்து செய்ய வேண்டுமென ஐ.ஜி. முருகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 14 அன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி-க்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ லஷ்மி பிரசாத் தலைமையிலான விசாகா குழு, தன் விசாரணையை முடித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி பிரிவினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, ஐஜி-க்கு எதிராக காவல்துறையின் பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், உயரதிகாரிகளுக்கு எதிரான புகார்களை தவிர்க்கவும், பாலியல் தொல்லைகளிலிருந்து பெண் அதிகாரிகள், பணியாளர்களை பாதுகாக்கவும் உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்த நீதிபதி, தன் அறையிலும் கேமரா பொருத்த உயர்நீதிமன்ற நிர்வாகப் பிரிவு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு பிப்ரவரி 19 அன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது, சீமா அகர்வால் தலைமையிலான குழுவே கலைக்கப்பட்ட பிறகு அதன்படி அமைக்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை செல்லாது என அறிவிக்க வேண்டுமென ஐஜி தரப்பில் வாதிடப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவு நகல் கிடைக்கும் முன்னரே தனது அலுவலகத்தில் உட்புகார் விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மறுநாளும் தொடர்ந்த விசாரணையில் ஐஜி-யின் மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிசிஐடி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், உட்புகார் விசாரணை குழுவோ, சிபிசிஐடி-யோ விசாரணை நடத்தக்கூடாது என தற்போதைய நிலை தொடரும் (ஸ்டேட்டஸ் கோ) உத்தரவை பிறப்பித்தனர்.
பின்னர் வழக்கு மீண்டும் கடந்த பிப்ரவரி 27 அன்று விசாரணைக்கு வந்தது.

புகாரில் தொடர்புடைய ஐஜி, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை அளித்துள்ளதால், மாநில அரசு அதிகாரிகள் நியாயமாக விசாரிக்க மாட்டர்கள் எனவும், ஸ்ரீலக்மிபிரசாத் தலைமையிலான குழு விசாரணையும் முறையில்லை எனவும் பெண் எஸ்.பி. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், டிஜிபி ஸ்ரீலட்சுமிபிரசாத் புகாரை கைவிட தன்னிடம் தனியாக தொலைப்பேசி மூலம் கோருவதாகவும், ஐஜி-க்கு எதிராக தான் அளித்த புகாரை சுதந்திரமான அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டும், அதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமெனவும் எனவும் கோரி பெண் எஸ்பி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளின் விசாரணையின் போது பெண் எஸ்.பி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டால் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என வேறு அமர்வுக்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில், வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு உட்புகார் விசாரணை குழுவிடம் பெண் எஸ்.பி. கொடுத்த புகாரும், அதனடிப்படையில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு இரண்டையும் தெலங்கானா போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT