தமிழகம்

ராமேசுவரம் கடலோரப் பகுதியில் நாளை நிழல் இல்லாத நாள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடலோரப் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.

அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிழல் இல்லாத நாளாக இது நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 29), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றுகிறது. சரியாக நண்பகல் 12.14 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு எங்கெங்கு எப்போது ஏற்படும் என்பதை https://alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் அறியலாம்.

உண்மையான நண்பகல் எது?

நண்பகல் என்றால் பெரும்பாலும் 12 மணியை தான் கூறுகிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. நமது இந்திய திட்ட நேரம் கிரின்வீச் நேரத்தை விட 5.30 மணி நேரம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அலகாபாத்தில் மட்டுமே 12 மணிக்கு சூரியன் செங்குத் தாக அமையும். அந்தமான் தீவுகள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 12 மணிக்கு (அலகாபாத்தில்) முன்னரே சூரியன் செங்குத்தாக தோன்றும். தமிழகம், கேரளா போன்ற இடங்களில் 12 மணிக்கு பின்னரே சூரியன் செங்குத்தாக தோன்றுகிறது.

இதன்படி, நிழல் இல்லாத நேரம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி தூத்துக்குடி பகல் 12.18 மணியளவிலும், திருநெல்வேயிலியில் 12.20 மணியளவிலும், ஆகஸ்ட் 31-ம் தேதி திருச்செந்தூர் பகல் 12.18 மணியளவிலும், நாங்குநேரியில் 12.20 மணியளவிலும், செப்டம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிலுல் பகல் 12.20 மணியளவிலும் ஏற்படும்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT