சென்னை
குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவை இனி இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இனிமேல், எளியமுறையில் ஆவணங்கள் இன்றி, இணையதளம் வாயிலாக குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும்.
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், சில நகராட்சிகளில் இணையதளம் வாயிலாக படிப்படியாக வசதிக்கு ஏற்ப மேம்படுத்தப்படும்.
15 மாநகராட்சிகளில் இதுவரை முறைப்படுத்தப்பட்ட 7 ஆயிரத்து 291 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 50 ஆயிரத்து 423 மனைகளும் 121 நகராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7 ஆயிரத்து 145 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 46 ஆயிரத்து 371 மனைகளும், 528 பேரூராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7 ஆயிரத்து 845 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 86 ஆயிரத்து 163 மனைகளும் என இதுவரை மொத்தம் 22 ஆயிரத்து 281 மனைப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 954 மனைகளில் உரிமைதாரர்களும் இத்திட்டத்தின்கீழ் 2500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு உட்பட்டவர்கள் இதில் பயன்பெறலாம். இது அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
இந்த நடைமுறையினால் பொதுமக்கள் உள்ளாட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்களைத் தவிர பிற உள்ளாட்சி அலுவலர்களை சந்திக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
இதில், விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி பெற்ற மனைப்பிரிவுகள் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். பதிவுபெற்ற பொறியாளர்களின் உறுதிமொழி ஆவணம், வரைப்படங்கள், கட்டிட அனுமதிக்கான உரிமை குறித்த ஆவணங்கள் மற்றும் உரிமை சரியாக உள்ளது என்பதற்கான நோட்டரி பப்ளிக் சான்று மற்றும் உத்தேச விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்பதற்கான பதிவுபெற்ற பொறியாளரின் உறுதிமொழி ஆகியவற்றை இணையதளாத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்"
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.