அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தின் நலனுக்காக முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தின் நலனுக்காக புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாகவும், இந்த பயணம் வெற்றிப் பயணமாக அமையும் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காகவும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று (ஆக.28) லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக மாநில துணைத் தலைவர் எல்.கே.சுதீஷ், ஆகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர், முதல்வர் பழனிசாமியை அலுவலகத்தில் சந்தித்து, அவரது வெளிநாட்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும், தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் புதிய முதலீடுகளை தமிழகத்தின் பால் ஈர்ப்பதற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த பயணம் வெற்றிப் பயணமாக நிச்சயம் அமையும். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் முதல்வருடன் செல்கின்றார். அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக முதலீடுகளை அமைச்சர் ஈர்ப்பார்.", என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT