முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

கொடுமுடியாறு அணை பாசனத்திற்காக வரும் 30-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

கொடுமுடியாறு அணை பாசனத்திற்காக வரும் 30 ஆம் தேதி திறக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கனமழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவான 52.5 அடியை, கடந்த இரு வாரங்களுக்கு முன் எட்டியது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் கொடுமுடியாறு அணை பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டும், இந்த அணை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இதிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 150 குளங்களுக்கு செல்கிறது. மேலும், இந்த நீரால் ஆயிரக்கணக்கிலான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்நிலையில், இந்த அணை வரும் 30 ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.28) வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 30 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்", என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT