அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அப்துல் கலாம் உடல் டெல்லியிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அப்துல் கலாமின் நண்பர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ராமேசுவரம் பள்ளிவாசலிலிருந்து காலை 9 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. 5 கி.மீ. தொலைவில், ராமேசுவரம் பிரதான சாலையில் பேக்கரும்பு என்ற இடத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் காலை 11 மணியளவில் தொடங்கும்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதை மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் நேற்று உறுதிப்படுத்தினர். இருவரும் மதுரை விமான நிலையத்துக்கு தனித்தனியாக சிறப்பு விமானங்களில் வருகின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் செல்கின்றனர்.
மேலும், ஆந்திரா உள்ளிட்ட சில மாநில முதல்வர்களும் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக அமைச்சர்கள் 8 பேர், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அரசு முழு மரியாதையுடன், குண்டுகள் முழங்க அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடைபெறும்.
முக்கிய பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிரதமர், ராகுல் காந்தி ஆகியோர் வருவதால் ராமேசுவரத்தில் 2 கூடுதல் டிஜிபிக்கள், 6 எஸ்.பி.க்கள் தலைமையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பாம்பன் பாலம், மண்டபம் அகதிகள் முகாம் உட்பட பல இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை விமான நிலையம் கூடுதல் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.