கி.ஜெயப்பிரகாஷ்
சென்னை
புதிய வாகனங்களின் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) வாகனங்கள் பதிவு இந்த மாதம் 50 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 81 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதுதவிர 60-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் பேர் புதிய வாகனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர, வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், உரிமையாளர்களின் பெயர் மாற்றம், வாகன வரி வசூல், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்
வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையே, ஆட்டோமொபைல் துறையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக புது வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதனால் ஆர்டிஓகளில் வாகனங்களுக்கான பணிகளும் குறைந்து, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
பெரிய அளவில் தாக்கம்
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால், புது வாகனங்களின் பதிவு படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆனால், இந்த மாதத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புது வாகனங்கள் வாங்குவது குறைந்ததால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப் பதிவு மட்டும் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதேபோல், பர்மிட் வாங்குவது, ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்டவையும் கணிசமாகக் குறைந்துள்ளன. இதனால், வட்டாரப் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் 40 சதவீதம் குறைந்துள்ளது.
போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்படும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைக்கும் ஆனால், இந்த ஆண்டு வருவாய் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், புதிய மோட்டார் வாகனசட்டத்திருத்தத்தின்படி கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, இச்சட்டம் அமலாகும்போது இதன் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும்’’ என்றனர்.
போக்குவரத்து மேம்பாடு
இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தியில் தொய்வு ஏற்படும்.
அதேநேரம் பேருந்து, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
எனவே, பொது போக்குவரத்துக்கு மக்களை ஈர்க்க அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதனால், மக்களுக்கு சீரான போக்குவரத்து வசதி கிடைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். விரைவாக செல்ல பேருந்துகளுக்கு தனி பாதை அமைக்கலாம். கட்டணமும் ஓரளவு நியாயமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பொது போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்’’ என்றார்.