மதுரை,
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது என கடந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கின் ஆவணங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் தாக்கல்.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மிழக பொதுத்துறை செயலர் தரப்பில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.