கோவை
பேரூரில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக, கால் டாக்ஸி ஓட்டுநர் தெரிவித்த தகவலால் காவல்துறையினர் நேற்று 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி முதல் மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியிருந்தனர்.
மேலும், சந்தேகத்துக்குரிய முறையில் பயணிகள் யாராவது வந்தால் தகவல் தெரிவிக்கும்படி, கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து நடத்துநர்கள் உள்ளிட்டோரிடம் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சரவணம்பட்டியை சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் கோவிந்தராஜன், நேற்று மதியம் அவசர அழைப்பு எண் 100-ஐ தொடர்பு கொண்டு, ‘‘பேரூரில் இருந்து காளம்பாளையம் செல்லும் வழியில் சந்தேகத்துக்குரிய முறையில் 2 பேர் செல்கின்றனர். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து இத்தகவல், கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட காவல்துறை நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில், பேரூர் சுற்றுவட்டாரப் பகுதியை போலீஸார் நேற்று மதியம் ‘அலர்ட்’ செய்தனர். பேரூரில் இருந்து காளம்பாளையம் செல்லும் வழியில், கால் டாக்ஸி ஓட்டுநர் தெரிவித்த அடையாளங்களின்படி சென்ற 2 பேரை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் என்பதும், வெள்ளை நிறத்தில் அவர்கள் இருந்ததால், வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்குமோ என சந்தேகப்பட்டு, கால்டாக்ஸி ஓட்டுநர் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர், நேற்று இரவு 7.30 மணிக்கு இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர். இதனால், பேரூர் பகுதியில் நேற்று மதியம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.