சென்னை
குட்கா முறைகேடு விவகாரத்தில் 2-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இருக்க வாய்ப்பிருப்ப தாகக் கூறப்படுகிறது.
குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர் கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைதான 6 பேர் மீது கடந்த ஆண்டு நவம்பரில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். இதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர்கள் சரவணன், சீனி வாசன், வழக்கறிஞர் வேலுகார்த் திக், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், குட்கா குடோனில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இந்த விவகாரம் நடந்த போது புழல் காவல் உதவி ஆணை யராக இருந்த மன்னர்மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முதல் குற்றப்பத்திரிகையில் முக்கியமான சிலரது பெயர்கள் இல்லை என பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து குட்கா வழக்கின் விசாரணை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப் பட்டனர். புதிய அதிகாரிகள் நியமிக் கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது.
எனவே, 2-வது குற்றப்பத்திரிகை யில் முக்கியப் பிரமுகர்கள் பலரின் பெயர்கள் இருக்கும் என்று கூறப் படுகிறது. இந்நிலையில், 2-வது குற்றப்பத்திரிகைக்கான பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் நீதிமன்றத்தில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குட்கா விவகாரத்தில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் ரூ.246 கோடி சொத்துகளை கடந்த மாதம் 29-ம் தேதி அமலாக்கத் துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.