தஞ்சாவூர்
திருவையாறு தியாக பிரம்ம மகோற்சவ சபாவின் தலைவராக இருந்த ஜி.ஆர்.மூப்பனார் மறைவை அடுத்து அவரது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி திருவையாறு தியாகராஜர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சபையின் செய லாளர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் ஆகியோர் வரவேற்றனர்.
சபாவின் அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் உமை யாள்புரம் சிவராமன், மறைந்த சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனாரின் படத்தை திறந்துவைத்தார்.
இதில் ஏ.கே.சி.நடராஜன், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி, நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஜி.ஆர்.மூப்பனாரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற தியாக பிரம்ம மகோற்சவ சபாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மறைந்த ஜி.ஆர்.மூப்பனாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
பின்னர் ஆண்டறிக்கையை சபாவின் பொருளாளர் கணேஷ் வாசித்தார். தொடர்ந்து, சபாவின் புதிய தலைவராக ஜி.கே.வாசன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஜன.11-ல் ஆராதனை விழா
கூட்டத்தில், 173-வது ஆராதனை விழாவை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறிய போது, "வேதாரண்யத்தில் அம்பேத் கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடைமடை பகுதிக்கு அவசரம், அவசியம் கருதி தண்ணீரை கூடுதலாக திறக்க வேண்டும்.
மத்திய அரசின் நல்ல முடிவால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப்போல ஜம்மு காஷ்மீர், லடாக் மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிபெறும். தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்து கிறேன்" என்றார்.