படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

தரமான சிகிச்சை வழங்க மருத்துவ கட்டிடங்கள், கருவிகள் இல்லை: வேதனை தெரிவித்த பேராசிரியர்கள்; உறுதியளித்த மதுரை எம்.பி.

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை,

"தரமான சிகிச்சை வழங்க போதுமான கட்டிட வசதி, மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று ஆய்வுக்கூட்டத்தில்" எம்பி சு.வெங்கடேசனிடம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் புலம்பினர்.

அவர்களிடம், மதுரை அரசு மருத்துவமனை வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் உறுதியளித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் எம்பி-க்களுக்கு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யும். இந்த நிதியை எம்பி-க்கள், தங்கள் தொகுதிகளுக்கு தேவையான திட்டங்களுக்கு செலவிட அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான எம்பிக்கள் ஒவ்வொரு துறைக்கும் தேவையான வசதிகளை அந்த துறை உயர் அதிகாரிகளிமே கேட்டறிந்து அதற்கான நிதி ஒதுக்கிவிடுவார்கள். ஆனால்,
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், தனது எம்பி நிதியில் மதுரை அரசு மருத்துவனைக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இன்று (திங்கள்கிழமை) காலை நேரடியாக மருத்துவமனைக்கே சென்று மருத்துவமனை ‘டீன்’, துறை பேராசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

‘டீன்’ வனிதா தலைமை வகித்தார். எம்பி, சு.வெங்கடேசன், துறை ரீதியாக ஒவ்வொரு துறைத் தலைவர்களிடம் கருத்துகளை கேட்டார்.
அவர்கள் கூறிய விவரம் வருமாறு:

ஹைடெக் மமோகிராம் கருவி தேவை..

புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், "பெண்களுக்கு தற்போது மார்பக புற்றுநோய் அதிகமாக வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த புற்றுநோய் வருவதற்கு காரணமே கிடையாது. ஆரம்பநிலையிலே நிலையிலே கண்டுபிடித்தால் (1.செ.மீ., அளவிற்குள்) மட்டுமே மார்பகத்தை அகற்றாமல் வெறும் கட்டியை மட்டும் அகற்றி குணப்படுத்தலாம்.

இதற்கு உயர் தொழில்நுட்ப மமோகிராம் கருவி தேவை. ஆனால், தற்போது நம்மிடம் 2004-ம் ஆண்டில் வாங்கப்பட்ட மமோகிராம் கருவியே உள்ளது. இந்த கருவியால் தெளிவாக சிகிச்சை வழங்க முடியவில்லை. அரசு மருத்துவமனைக்கு வந்தாலே மார்பகத்தை அகற்றிவிடுவார்கள் என்பதற்கு பயந்து பெரும்பாலான பெண்கள் சிகிச்சைக்கு வருவதில்லை. ரூ.45 கோடியில் புற்றுநோய் மையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும" என்றார்.

.ஹைடெக் வெண்டிலேட்டர் மிஷின்கள் தேவை..

இதயநோய் சிகிச்சைப்பிரிவு தலைவர் பேராசிரியர் வீரமணி கூறுகையில், "இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க முடியவில்லை. உயர் தொழில்நுட்ப வெண்டிலேட்டர் மிஷின்கள் தேவை" எனக் கூறினார்.

பொதுமருத்துவப்பிரிவு தலைவர் பேராசிரியர் நடராஜன் கூறுகையில், " பொது மருத்துவப் பிரிவுக்கு ஒருங்கிணைந்த கருத்தரங்கக்கூடம் அமைக்க நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். அமைந்தால் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வசதியாக இருக்கும். சிகிச்சைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்" என்றார்.

மயக்கவில் துறை தலைவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் கூறுகையில், ”மயக்கவில் துறைதான் மருத்துவத்துறையின் முதுகெலும்பு.
அனைத்து அறுவை சிகிச்சை துறைகளுடன் இணைந்து மயக்கவில்துறை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய உள்ளது. ஆனால், நோயாளிகள் வருகை, அறுவை சிகிச்சைகளுக்கு தகுந்தவாறு மருத்துவர்கள் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படுகிறது. புதுப்புது மருத்துவத் துறைகள் தொடங்கப்படுகின்றன. 25 அறுவை சிகிச்சை தியேட்டர்களில் தினமும் 15 தியேட்டர்களில் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. ஆனால், மயக்கவியல் துறை மருத்துவர்கள் எண்ணிக்கை அதே எண்ணிக்கையில் இருப்பதால் அறுவை சிகிச்சைகள் தாமதமாக நடக்கும் நிலை உள்ளது. பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளன" என்றார்.

ரத்த வங்கி தலைவர் பேராசிரியர் சிந்தா கூறுகையில், "மதுரை ரத்த வங்கியில் 50 டெக்னிசீயன்கள், 4 சூப்ரவைசர்கள், 2 குவாலிட்டி மானேஜர்கள் தேவை. ஆனால், இந்தப் பணியிடங்கள் முழுமையாக இல்லை" என்றார்.

ரேடியாலஜி துறை தலைவர் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகையில், "5 சிடி ஸ்கேன், 2 எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளது. விரைவில் பெட் ஸ்கேன் வரவுள்ளது. ஆனால், 2 பேராசிரியர்கள், 3 இணைப் பேராசிரியர்கள், 8 உதவிப் பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கட்டமைப்பு வசதிகளும் மிக பழமையாகவே உள்ளன. மொபைல் ஆப்ரேசன் தியேட்டர் ஒன்று தேவை" என்றார்.

குழந்தைகள் நல சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் பாலசங்கர், "குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு கட்டிடங்கள் மிக மோசமாக இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. பொதுப்பணித்துறையிடம் சொல்லவிட்டோம். ரூ.90 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தை சிகிச்சை மையம் கட்டுவதற்கு திட்டம் பரிந்துரை செய்தோம். மருத்துவக்கல்வி இயக்குனரகம் ஒப்புதல் வழங்கி அரசுக்கு பரிந்துரை செய்துவிட்டது. ஆனால், தற்போதுவரை இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. குழந்தைகள் சிகிச்சைத்துறையின் கீழ் சப்-ஸ்பெஷாலிட்டி துறைகள் வந்தால் மட்டுமே இந்த துறை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோக முடியும்" என்றார்.

மகப்பேறு சிகிச்சைப்பிரிவு தலைவர் பேராசிரியர் சுதா, "குழந்தையில்லா தம்பதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டம் வரையே இங்குள்ள மருத்துவ உபகரணங்களை வைத்து சிகிச்சை வழங்க முடிகிறது. அவர்களுக்கான செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும்" என்றார்.
காதுமூக்கு தொண்டை சிகிச்சைப்பிரிவு தலைவர் தினகரன் கூறுகையில், "2016-ம் ஆண்டு பிறவி காது கேளாதவர்களுக்கான பேச்சுப் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி அரங்கு, ஒரு தியேட்டர் போன்று இருக்க வேண்டும். ஆனால், அது இல்லாததால் பேச்சுத்திறன் பயிற்சி வழங்குவது சிரமமாக உள்ளது" என்றார்.

குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் பேராசிரியர் பிரேம்குமார் கூறுகையில், "எக்ஸ்ரே எடுக்க பிறந்து 10 நாள், 30 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை ஒரு இடத்தில் மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. அதனால், மொபைல் எக்ஸ்ரே யூனிட் அமைக்க வேண்டும்" என்றார்.

இறுதியாக எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘என்னுடைய இந்த 5 ஆண்டு பதவிகாலத்தில் மதுரை அரசு மருத்துவமனை வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளேன். என்னுடைய நிதி போக தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு திட்டங்களில் என்னென்ன திட்டங்களை பெற இயலுமோ அவற்றைப் பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான வசதிகளை பெற்றுக் கொண்டு மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்த உள்ளேன்" என்றார்.

SCROLL FOR NEXT