சேதமாக்கப்பட்ட அம்பேத்கர் சிலை 
தமிழகம்

அம்பேத்கர் சிலை உடைப்பு: அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் மற்றும் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மீண்டும் தமிழக அரசு புதிய வெண்கலச் சிலையை நிறுவியது.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

இத்தகைய சூழலை உருவாக்குகிற சாதிய சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் போற்றி, பாராட்டி, பெருமைப்பட வேண்டிய அம்பேத்கர் சிலைக்கு உரிய பாதுகாப்பையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர் அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது.

அண்மைக்காலங்களில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமைபடுத்தி விட முடியாது. இந்தப் போக்கு தடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ப.ரஞ்சித், திரைப்பட இயக்குநர்

தன் சிந்தனைகளில் விடுதலையை அடையாத ஒருவனுக்கு உடல் சார்ந்த விடுதலை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் என்ன பயன்? சிந்தனைகள் சுதந்திரமானவையாக இல்லையென்றால் கை விலங்கிடப் படாவிட்டாலும் அவன் அடிமைதான்.

லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்

ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்தித்து அர்ப்பணிப்போடு போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்த மாபெரும் மக்கள் தலைவரை ஜாதியத் தலைவராய் பார்க்கும் கேடுகெட்ட சமூக மனநிலை என்று மாறும்

இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT