தமிழகம்

மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனைக்கு உலக வங்கி நிதி கிடைப்பதில் சிக்கல்: கே.எஸ்.அழகிரி தகவல்

என்.சன்னாசி

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு உலக வங்கியிலிருந்து நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்லதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஆடம்பரமாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க ரூ.10 கூட நிதி ஒதுக்கவில்லை.

உலக வங்கியை நாடினீர்கள். அது லாபம் பார்க்கும் வங்கி. வங்கி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், கடனை திருப்பிச் செலுத்துவது பற்றி உத்தரவாதம் அளிக்காததால் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவுக்கு இவ்வளவு ஆதரவு தரும் அதிமுக மத்திய அரசிடம் இருந்து எய்ம்ஸ்க்கு நிதியை பெற முடியாதது ஏன்? என்பதற்கு முதல்வர், சுகாதார, வருவாய்துறை அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். சிறப்பு சலுகை மூலம் எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.

பஞ்சம் வரும்..
இந்தியப் பொருளாதார நிலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த ஜூலை மாதம் மட்டும் அந்நிய முதலீடு ரூ.12 ஆயிரம் கோடி வெளியில் சென்றிருக்கிறது.

'பார்லே' பிஸ்கட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கியுள்ளது. ஜிஎஸ்டியால் தொழிலாளர்களை நீக்கியதாக கூறுகின்றனர். ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் காலத்தில் எழுச்சி பெற்றது. ஆனால், இப்போதைய மத்திய அரசின் கீழ் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக தலைவர் ராமதாஸ்கூட இதனைக் கண்டித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவில்லை எனில் பஞ்சம் வரும்" எனக் கூறினார்.

அச்சம் ஏன்?
காஷ்மீர் சென்ற ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அழகிரி, "காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ராகுலுக்கு அழைப்பு விடுத்தார். விமானம் தயார் செய்கிறேன் எனக் கூறியதற்கு விமானம் வேண்டாம், நானே வருகிறேன் என ராகுல் கூறினார். இதன்பின்னரே, 10 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் ஸ்ரீநகர் சென்றார். ஆனால், காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் நுழைய தடை விதிக்கின்றனர். எதற்காக மத்திய அரசு அஞ்சுகிறது? எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு" என்றார்.

வெள்ளை அறிக்கை வேண்டும்:

"முதல்வர் அந்நிய முதலீடுகளை பெற முயல்வது மகிழ்ச்சி. சென்னையில் ஏற்கனவே அந்நிய முதலீடு குறித்து தொடர்பாக நடத்திய இரு மாநாடு மூலம் என்ன நடந்தது? இது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.உள்நாட்டி ல் வெற்றி பெற முடியாத நீங்கள், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்குச் சென்று வெற்றி பெற முடியாது. விளம்பரம் தேடுவதிலும் பலன் இருக்கவேண்டும்" என்று முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி பேசினார்.

சிதம்பரத்தின் வெளிநாட்டு சொத்துகள் பற்றித் தெரியாது..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வெளிநாட்டு சொத்துகளைப் பற்றி எனக்குத் தெரியாது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். மேலும் பேசும்போது, ப.சிதம்பரம் சொந்த தாத்தா அண்ணாமலை செட்டியாருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் சொத்து உள்ளதாக கூறினாலும், ஆதாரபூர்வமாக எனக்கு அதுகுறித்து தெரியாது. இருந்தாலும் தவறு இல்லை. தேர்தலில் போட்டியிடும்போது, சொத்துகள் மறைக்கப்பட்டு இருந்தால் தவறு. ப. சிதம்பரத்திற்கென கட்சி மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துகின்றனர். அவரது கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் எனக் கூறினார்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் 99 சதவீதத்தினர் தோல்வியடைந்துள்ளனர். சமூகத்தை மேம்படுத்தும் துறை கல்வித்துறை. அதில் அரசும், முதல்வரும் கவனம் செலுத்தவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT