சென்னை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி, மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையில், 'கல்வி தொலைக்காட்சி' தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி தொலைக்காட்சி சேனலை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வைப் பள்ளி மாணவர்கள் காண, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கேபிள் இணைப்பு உள்ள பள்ளிகளில் ப்ரொஜெக்டர் மூலமும், இல்லாத பள்ளிகளில் யூடியூப் மூலமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன ஒளிபரப்பப்படும்?
பள்ளி கல்வித்துறையின் புதிய திட்டங்கள், சுற்றறிக்கைகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரை யாடல்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கற்றல், பாடல்கள் மூலம் பாடங்களை புரிய வைத்தல் குறித்த பதிவுகள் ஒளிபரப்பப்படும்.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் போன்ற உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள், ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளை அணுகுதல், பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்தல், சுமாராக மற்றும் மெதுவாக படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்