ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீஸார் மூன்றாவது நாளாக நேற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள முக்கியக் கோயில்களின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலையடுத்து ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதிகளான கருங்கல்பாளையம், ஆசனூர், பண்ணாரி, நொய்யல் உள்ளிட்ட 13 இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், திரையரங்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதிகளில் தங்கியுள்ளோர் விவரம் சேகரிக்கப்பட்டு, சந்தேகத் திடமானவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பெரியமாரியம்மன் கோயில், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், மகிமாலீஸ்வரர் கோயில், கொங்கலம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், பண்ணாரியம்மன், கோபி பாரியூர் அம்மன், பச்சைமலை, திண்டல் வேலாயுத சுவாமி கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்களில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயிலில் தேவையற்ற அல்லது சந்தேகப்படும்படியான பொருட்களை அகற்றும் பணியும் நடந்தது. கோயில்களில் தேவையற்ற அறைகள் இருந்தால், அதனை மூடி வைக்கவும் அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட இந்து அற நிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் கோயில்களில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, கோயில்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் கோயில்களில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக செயல் படுகிறதா என்று ஆய்வு செய்த உதவி ஆணையர், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத கோயில்களில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்