ஈரோடு
ஈரோட்டில் நேற்று வானில் சூரியனைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் தோன்றியதை பொது மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வானில் மேகக்கூட்டம் இருந்ததால், நேற்று பகல் முழுவதும் வெயில் குறைவாக இருந்தது. காலை 11 மணியளவில் சூரியனைச் சுற்றி வானில் பெரிய ஒளிவட்டம் தோன்றியது. ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த ஒளிவட்டம் நீடித்ததால், இதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நா. மணி கூறியதாவது:
மழைக்காலங்களில் அல்லது வானத்தில் மிக அதிக அளவில் மழை மேகங்கள் இருக்கும் போது, சூரிய ஒளியை அவை மறைக்கும். மேகங்களின் அடர்த்தியைப் பொருத்து சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுமானால், பகல் நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கும். மேகங்கள் நகரும் போது, சூரிய ஒளி பூமியில் பட்டு, கூடுதல் வெளிச்சம் கிடைக்கும்.
இந்த மேகங்கள் அடர்த்தி குறைவாக, மிக சன்னமான மேகங்களாக இருக்கும் சமயத்தில், நிறைய பனித் துகள்கள் அந்த மேகங்களில் இருக்கும். அந்த காலகட்டத்தில் 22 டிகிரியில் சூரியனின் வெளிச்சம் அதன் மேல் படும்போது, ஒளிச் சிதறல் நிகழும். அத்தகைய ஒளிச்சிதறல் காரணமாகவே சூரியனைச் சுற்றி இத்தகைய ஒளிவட்டம் ஏற்படும். இதே போன்ற வளையங்கள் நிலவின் வெளிச்சத்திலும் தோன்றும். மழை மேகங்களில் உள்ள பனித்துகள் மேல் சூரிய ஒளி அல்லது சந்திரனின் ஒளி படும்போது ஏற்படும் ஒளிச்சிதறலின் பரிமாணமே இதுபோன்ற ஒளிவட்டம் தோற்றத்திற்கு காரணமாகும், என்றார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்