தமிழகம்

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க மின்னணு பணப் பரிவர்த்தனையின்போது பாதுகாப்பான செயலிகளை பயன்படுத்த வேண்டும்: வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ப.முரளிதரன்

சென்னை

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், மொபைல் மூலம் மின்னணு பணப் பரிவர்த்தனை களை மேற்கொள்ளும்போது, வங்கிகள் தங்களுக்கென வடி வமைத்துள்ள பாதுகாப்பான செயலிகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக, மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி அறிவித்தது. அதன் பிறகு, ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் குறைத்து மின் னணு (டிஜிட்டல்) பணப் பரிவர்த் தனையை ஊக்குவித்து வருகிறது.

அதே சமயம், இந்தப் பரிவர்த் தனையில் ஆன்லைன் மோசடி களும் அதிகரித்து வருகின்றன. வங்கிப் பரிவர்த்தனை செயலி களைப் போன்று பேடிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் போன்ற பல்வேறு செயலிகள் (ஆப்) மூலம் மக்கள் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு செய்யும்போது பல்வேறு மோசடிகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

இன்றைக்கு உண்ணும் உணவு முதற்கொண்டு தேவையான அனைத்துப் பொருட்களும் பொது மக்கள் ஆன்லைன் மூலம் வீட்டுக்கே வரவழைத்துப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, மின்னணுப் பணப் பரிவர்த்தனை சேவை அதிகரித்துள்ளது. இதற்காக, தங்களது மொபைலில் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானவை என சொல்ல முடியாது.

இதன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் மோசடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.60 கோடி அளவுக்கு தமிழகத்தில் ஆன்லைன் மோசடி நடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளிட்ட புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் தமிழகத்தில் ரூ.4 கோடி அளவுக்கு ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. இது 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ.41 கோடியாகவும், 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.15 கோடியாகவும் உள்ளது.

இதேபோல், மகாராஷ்டிராவில் ரூ.46 கோடியும், ஹரியாணாவில் ரூ.32 கோடியும், கர்நாடகாவில் ரூ.18 கோடிக்கும் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதையடுத்து, தகவல்களைக் காப்பதற்காகவும், பணப் பரிவர்த்தனை தகவல்கள் திருடு போவதைத் தடுக்கும் வகையிலும் கூகுள் பே, அமேசான் பே ஆகிய நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களின் தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமிக்காமல், இந்தியாவில் உள்ள சர்வர்களில் சேமிக்கும்படி மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மின்னணு பணப் பரிவர்த்தனை செய்ய மொபைல் போனில் பயன்படுத்தப்படும் செயலிகள் மற்றும் அப்ளிகேஷன்களில் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வைஃபை வசதியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த செயலியைப் பயன் படுத்தினாலும், பயன்படுத்திய பின் அதிலிருந்து முழுமையாக வெளியே வர வேண்டும்.

சந்தேகத்துக்கு இடமான தளங்களில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ளக் கூடாது. அவ்வப்போது வரும் புதிய பாதுகாப்பு அப்டேட்களை உடனடியாக செய்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தங்களுக்கென உருவாக்கியுள்ள செயலிகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங் களின் செயலி மூலம் வாடிக் கையாளர்களின் வங்கிகளைத் தொடர்பு கொள்ளும் செயலி களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ரகசிய குறியீட்டை (பாஸ்வேர்டு) மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

SCROLL FOR NEXT