தமிழகம்

குடும்ப அரசியல் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

செய்திப்பிரிவு

குடும்ப அரசியல் என்ற விமர்சனத்துக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சில மாதங்களுக்கு முன்னர் திமுக இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எதிர்க்கட்சிகள் அனைத்துமே திமுக-வில் குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்தார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டி வேறு யாருமே, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் வர இயலாது என்று பேட்டிகளில் எதிர்க்கட்சியினர் கடுமையாகச் சாடினார்கள்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தி.மு.க இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில - அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது ஆற்றிய உரையில் எதிர்க்கட்சியினரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "‘குடும்ப அரசியல்’ என்பார்கள். ஆம், இதுதான் என் குடும்பம்!" என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். எதிர்க்கட்சியின் தொடர்ச்சியாக குடும்ப அரசியல் என்று விமர்சித்து வந்ததிற்குப் பதிலடியாகவே இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT