ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டியாரின் 150- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற விழாவில் கண்ணன் செட்டியார் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறைகளை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, கண்ணன் செட்டியார் மற்றும் அவரது மனைவி சீதம்மா ஆகியோரின் முழு உருவச்சிலையையும் திறந்து வைத்தார். படம்: ம.பிரபு 
தமிழகம்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் கூறியதுபோல ஆரம்பக் கல்வியை தாய்மொழியில்தான் கற்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை

ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் தான் கற்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

சென்னை பட்டாபிராம் இந்துக் கல்லூரி, சம்ஸ்கிருத கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங் கள், ஏழை மக்களுக்காக பல்வேறு மருத்துவமனைகளை நிறுவிய தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியாரின் 150-வது பிறந்த தின விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார்.

விழாவில், 150-வது ஆண்டு மலரை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வெளியிட்டார். கண்ணன் செட்டியார் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறைகளை வெளியிட்டு, கண்ணன் செட்டியார் - சீதம்மா தம்பதியரின் முழுஉருவச் சிலை யையும் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.

அவர் பேசியதாவது:

கண்ணன் செட்டியார் வருங் கால தொழில் முனைவோர், தொழிலதிபர்களுக்கும் வழிகாட்டி யாக திகழ்ந்தவர். பாரதியார், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்களால் பாராட்டப்பட்ட வர். பன்முகத் தன்மை கொண்ட வர். ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கியதுடன், குழந்தை களுக்கு இலவச பால், விதவை களுக்கு நிதியுதவி, கல்வி உதவித் தொகை என பல திட்டங்களை செயல்படுத்தினார்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புதிய கல்வித் திட்டம் என்பது, 50 சதவீதம் வகுப் பறையிலும், 50 சதவீதம் கள ஆய்வாகவும் அமையும். பழமை யான பள்ளிக்கல்வியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆரம்பக் கல்வியை தாய்மொழியில்தான் கற்க வேண் டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்திய மொழிகள் அறிந்த ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தாய்மொழியை படிக்காமல் கற்கும் கல்வியால் எந்த பயனும் இல்லை. எனவே, மாணவர்கள் முதலில் தாய்மொழியை கற்க வேண்டும். அதன்பிறகு, முடிந்த அளவு மற்ற மொழிகளையும் கற்க வேண்டும். நாம் எந்த மொழியையும் கண்ணை மூடிக் கொண்டு திணிக்கவும் வேண்டாம்; தடுக்கவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பல மொழிகள் கற்றால்தான் அறிவு விரிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் சம்பத், அறக்கட்டளை தலைவர் எம்.வெங்கடேச பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘புளியோதரைக்கு ஈடு இணை இல்லை’

“குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும். பலவித நோய்களை உண்டாக்கும் துரித உணவுகளை தவிர்த்து, நம் பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். காலநிலைக்கு ஏற்ற உணவுகளை உண்ண வேண்டும். நமது புளியோதரைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT