சென்னை போரூரில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவனை போலீஸார் பத்திரமாக மீட்டனர். சிறுவனை கடத்திய ஓய்வுபெற்ற டிஎஸ்பி மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் மதனந்தபுரம் நந்த கோபால் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (41). எல் அண்டு டி நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி (37). இவர்களின் மகன் அரவிந்தராஜ் (11), மதனந்தபுரம் பத்மாவதி தெருவில் உள்ள சுவாமிஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கமாக பள்ளி முடிந்ததும் மாலை 3.45 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் அரவிந்தராஜ், கடந்த 2-ம் தேதி மாலை 4 மணி வரை வரவில்லை.
மாலை 4 மணி அளவில் சுகந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘உங்கள் மகன் அரவிந்தராஜை கடத்திவிட்டோம். ரூ.50 லட்சம் கொடுத்தால் மகனை உயிருடன் ஒப்படைப்போம். பணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். போலீஸுக்கு போனால், மகனை கொலை செய்துவிடு வோம்’’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த சுகந்தி, செல்போனில் கணவரை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து பாலாஜியும் சுகந்தியும் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை சந்தித்து நடந்த சம்ப வத்தை தெரிவித்தனர். ஜார்ஜ் உத்தரவின் படி துணை ஆணையர்கள் ஆர்.சுதாகர், மயில்வாகனன், ஜெயகுமார், உதவி ஆணை யர் பி.சுப்பிரமணி ஆகி யோர் தலைமையில் 16 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. முதல் கட்டமாக மதனந்தபுரம் பகுதி யில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சுகந்தியிடம் பேசிய மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து, அவர் இருக்கும் இடத்தை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பாலாஜியும் சுகந்தியும் வந்திருந்தனர். அப்போது சுகந்தியின் செல் போனுக்கு மர்ம நபரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று சுகந்திக்கு போலீஸ் அதிகாரிகள் ஆலோ சனை வழங்கினர்.
போனில் பேசிய மர்ம நபர், ‘‘எங்கள் எச்சரிக்கையை மீறி போலீஸுக்கு சென்று விட்டீர்கள். பரவாயில்லை. பணத்தை தயார் செய்துவிட்டீர்களா?’’ என்று கேட்டுள் ளார். ‘‘அவ்வளவு பணம் இல்லை. ரூ.2 லட்சம்தான் இருக்கிறது’’ என்று சுகந்தி கூறியதும், ‘‘கேட்ட பணத்தை கொடுக்கா விட்டால், உங்கள் மகனை உயிருடன் பார்க்க முடியாது. பணத்தை சீக்கிரம் தயார் செய்யுங்கள்’’ என்று கூறிவிட்டு, மர்ம நபர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து 5, 10 நிமிட இடைவெளி யில் மீண்டும் மீண்டும் சுகந்தியை தொடர்புகொண்ட மர்ம நபர், பணத்தை தயார் செய்து விட்டீர்களா என்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். மாலை 6 மணிக்கு தொடர்பு கொண்டபோது, பணத்தை தயார் செய்துவிட்டதாக சுகந்தி தெரிவித்தார். இந்து கல்லூரி ரயில் நிலையத்துக்கு வரும்படி கூறிவிட்டு மர்ம நபர் இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து, இரவு 8.30 மணி அளவில் இந்து கல்லூரி ரயில் நிலையத்துக்கு சென்றார் சுகந்தி. தனிப்படைப் போலீஸாரும் அவரை ரகசியமாக பின்தொடர்ந்தனர். சுகந்தியை தொடர்பு கொண்ட மர்ம நபர், ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பாலத்தில் ஏறி, பணப்பையை கீழே போடுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, பாலத்தில் இருந்து கருப்புநிற பேக்கை சுகந்தி கீழே போட்டார். அதை மர்ம நபர் எடுக்க முயன்றபோது, அங்கு மறைந்திருந்த போலீஸார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். காரில் இருந்த சிறுவன் ஆனந்தராஜையும் பத்திரமாக மீட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காவல் கூடுதல் ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், இணை ஆணையர் சண்முகவேல் மற்றும் உதவி ஆணையர் பி.சுப்பிரமணி ஆகியோர் கூறியதாவது:
ஆவடி பிருந்தாவனம் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. மத்திய ரிசர்வ் படையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன்கள் 2 பேரும் சாப்ட்வேர் இன்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர். 3-வது மகன் பாலா என்கிற பாலமகேந்திரன் (26)தான் சிறுவனை கடத்திச் சென்று மிரட்டியுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ள பாலா, ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றி வந்துள்ளார். அதன்பின் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.
பெற்றோர் கண்டுகொள்ளாததால், தந்தையின் காரை எடுத்துக்கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி நண்பரைப் பார்க்க மதனந்தபுரம் சென்றபோதுதான் சிறுவனை பார்த்துள்ளார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் சிறுவனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு, தொடர்ந்து 2 நாட்கள் கண்காணித்துள்ளார். கடந்த 2-ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வந்த சிறுவனை பாலா கடத்திச் சென்றுவிட்டார். பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் மீட்டுவிட்டோம். சிறுவனை மீட்கும் பணியில் உயர் அதிகாரிகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரமாக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அலைக்கழிப்பு
சிறுவனின் தாய் சுகந்தி கூறும்போது, “ரூ.50 லட்சம் கொண்டு வரும்படி கடத்தல்காரன் தெரிவித்தான். ஆனால், போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ.2 லட்சத்தை மட்டுமே ஒரு கருப்பு நிற பையில் போட்டு எடுத்துச் சென்றேன். முதலில் ஆவடி ரயில் நிலையத்துக்கு வரச் சொன்ன கடத்தல்காரன், பிறகு பட்டாபிராம், திருநின்றவூர் என இடத்தை மாற்றினான். இறுதியாக இந்து கல்லூரி ரயில் நிலையத்துக்கு வரும்படி தெரிவித்தான்’’ என்றார்.
கொத்தனாரின் செல்போன்
“கடத்தல்காரன் பாலா பயன்படுத்திய செல்போன் சிம்கார்டு, ஆவடியில் உள்ள ஒரு கொத்தனார் ஆறுமுகம் என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஆவடி பேருந்து நிலையத்தில் 15 நாட்களுக்கு முன்பு செல்போன் காணாமல் போனதாக தெரிவித்தார். அந்த செல்போனை பயன்படுத்திதான் சுகந்தியிடம் பாலா பேசியுள்ளார்.
சுகந்தி சென்ற ரயிலில் மாறுவேடத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சென்றனர். அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்” என்று உதவி ஆணையர் சுப்பிரமணி கூறினார்.