தமிழகம்

ப.சிதம்பரம் கைதுக்கு அவரது குடும்பத்தினரே வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜூ கிண்டல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

'ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அவரது குடும்பத்தினரே வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள்' என்று மதுரை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை அருகே முத்துப்பட்டியில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்கரை சாலை மேம்படுத்தும் பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு அவரது குடும்பத்தினரே வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பிறகு எப்படி சாமான்ய மக்கள் வருத்தப்படுவார்கள்?

அவர் மேல்தட்டு மக்களுக்கான அரசியல்வாதியாக திகழ்ந்ததே அவரது இந்த நிலைக்கு காரணம். அவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்தும், தமிழகத்திற்கான எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

காரைக்குடி பகுதியில் மட்டுமே அதிக வங்கிகளையும், ஏடிஎம் மையத்தையும் தொடங்கி வைத்தார். ஆனால், வங்கியையும், ஏடிஎம் மையங்களையும் பயன்படுத்தும் அளவிற்கு அவரது தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் பெருக்கவில்லை. மக்கள் பயன்பாடில்லாமல் அவரது தொகுதி ஏடிஎம்களே மூடிக் கிடக்கின்றன" என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து, "சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வைகை ஆற்றின் இருகரைகளையும் மேம்படுத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது, அதில் ஒரு சொட்டுகூட கழிவுநீர் கலக்காத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.

மதுரையில் கடந்த 7 மாதங்களில் 25 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பாக, "மதுரையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கவில்லை. தற்போது பழிக்கு பழி வாக்குவதாலேயே குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க காவல்துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வாளர்கள்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT