டாஸ்மாக் மது விற்பனை, அரசின் கொள்கை முடிவாக இருப்பதால் அதில் தலையிட இயலவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வராகி தாக்கல் செய்த மனு விவரம்: டாஸ்மாக் கடைகளில் மதுவகைகளை விற்க வகைசெய்யும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதி 2003-ஐ தமிழ்நாடு அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் கொண்டு வந்தார். இந்த விதிமுறை 29-11-2003 முதல் அமலில் உள்ளது.
தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மதுவுக்கு அடிமை யாகிவிட்டனர். இதனால் பெண் கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள், உடல்நலக் குறைவு, திருட்டு, குடும்ப பிரச்சினை போன்றவை அதிகமாகி சமுதாயத்தின் அமைதி குலைகிறது.
மதுப்பழக்கத்தால் பெரும் பாலும் ஆதிதிராவிடர், பழங்குடி யினர், மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, இத்தகைய போக்கை தடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் மதுவிற் பது பெண்கள் மற்றும் குழந்தை களின் நலனுக்கும், உரிமைகளுக் கும் எதிராக இருப்பதால், அரசிய லமைப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகக் கருதி, டாஸ்மாக் கடை களில் மதுவிற்பனை செய்ய வகை செய்யும் விதியை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு: மது விற் பனை என்பது அரசு மற்றும் சட்டப் பேரவையின் முடிவு என்பதால், அந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் கருத்தை கேட்க முடியாது. மது விற்பனைக்கான விதி, அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.
இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி வாதிடுகையில், ‘மதுகுடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண் டும் என்பதே மாநில அரசின் கொள்கையாகும். மதுபானங் களுக்கு வரி விதிக்கப்படுகிறது. 2003-ல் 7,800 மதுபானக் கடைகள் இருந்தன. இப்போது 6,800 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மதுவிற்பனையும் 4 மணி நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.
மதுபாட்டில்களிலும், மதுபானக் கடைகளிலும் “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்” என்று எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை இங்கே பதிவு செய்கிறோம். மனுதாரர் கோரிய உத்தரவை பிறப்பிக்க இயலவில்லை.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.