தமிழகம்

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தன்னிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு

செய்திப்பிரிவு

சென்னை

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தன்னிடம் கேட்கப்பட்ட சம்பந்தம் இல்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஜெ.ஜெ. டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றச்சாட்டு பதிவு

எனினும் சசிகலாவிடம் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு பதிவின்போது, சில நடைமுறைகள் பின்பற்றப்படாததால், அவரிடம் கடந்த ஜனவரி மாதம் காணொலிக் காட்சி மூலம் 2-வது முறையாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘‘வழக்கில் ஜெ.ஜெ. டிவியின் நிர்வாக இயக்குநர் என பாஸ்கரனை குறிப்பிட்டுள்ள நிலையில், ஜெ.ஜெ டிவியின் இயக்குநர்களில் ஒருவரான என்னிடம் அன்றாட நிர்வாக விவகாரம் தொடர்பாக புதிதாக பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மாஜிஸ்திரேட் நிராகரித்துவிட்டார். எனவே, அந்த கேள்விகளை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது.

அப்போது சசிகலாவின் மனுவுக்கு பதில் அளித்த அமலாக்கத் துறை, ‘‘இயக்குநர் குழுவில் இருந்த சசிகலாவுக்கு ஜெ.ஜெ.டிவியின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தெரியும். மேலும், பாஸ்கரனிடம் கேட்கவேண்டிய கேள்விகளை தன்னிடம் கேட்பதாக சொல்லவோ, ஏற்கெனவே பாஸ்கரனிடம் கேட்ட கேள்விகளை தன்னிடம் மீண்டும் கேட்கக் கூடாது என்று சொல்லவோ சசிகலாவுக்கு உரிமை இல்லை. தவிர, கேள்விகளை திருத்த மாஜிஸ்திரேட்டுக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

விசாரணை தள்ளிவைப்பு

இதற்கு விளக்கம் அளிக்குமாறு சசிகலா தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT