உதகை
உதகை குதிரை பந்தய மைதானத்தை கோத்தகிரிக்கு மாற்ற மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதகையின் நுரையீரலாக இருக்கும் மைதானத்தை சிதைக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
உதகை பேருந்து நிலையத்துக்கு அருகில் குதிரை பந்தய மைதானம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இங்கு குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க 1.4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து உதகை குதிரை பந்தய மைதானத்தை நிர்வகிக்கும் மெட்ராஸ் ரேஸ் கிளப், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது.
இதை எதிர்த்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உதகை குதிரை பந்தய மைதானத்தின் 54 ஏக்கரையும் மாவட்ட நிர்வாகமே எடுத்து கொள்ளும். அதற்குப் பதிலாக கோத்தகிரி அருகேயுள்ள நெடுகுளா கிராமத்தில் குதிரை பந்தய மைதானம் அமைக்க மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 52 ஏக்கர் நிலம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு மலைவாழ் மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். நீலகிரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் ‘நீலகிரி டாகுமென்டேஷன் சென்டர்' அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை
யில் மாவட்ட நிர்வாகத்தின் முடிவு தவறானது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“நீலகிரி மாவட்டத்தின் வர்த்தகம், வேளாண்மையின் முதுகெலும்பாக படுகர் மலைவாழ் மக்கள் உள்ளனர். குதிரை பந்தய மைதானத்துக்காக மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ள நெடுகுளா பகுதி, படுகர் மக்களின் வாழ்விடமாகும். இது அவர்களின் புனிதத் தலமாகவும் போற்றி வணங்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் லட்சக்கணக்கான படுகர் மக்கள் கூடுகின்றனர். தங்கள் வாழ்விடத்தை, புனிதத் தலத்தை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பேரகணி கிராம மக்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.
படுகர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குதிரை பந்தய சூதாட்டத்துக்கு இடம் அளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன்வந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தவறான முடிவு. இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும்” என்று அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
நீலகிரி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். “உதகையின் மலை முகடு
கள் மொட்டையடிக்கப்பட்டு, நகரம் முழுவதும் கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்து நிற்கின்றன. நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால் மழைநீர் சமதளத்துக்கு வழிந்தோடிவிடும். இதனால் ஆண்டு முழுவதும் நீலகிரியில் தண்ணீர் பற்றாக் குறை நிலவுகிறது. சுற்றுலாத்தலமான உதகையில் கட்டிடங்கள் பெருகி வருவதால் மழைநீர் நிலத்தில் இறங்க வழியில்லை. தற்போது உதகையின்
நுரையீரலாக, பசுமைப் போர்வையாக, மழைநீர் சேகரிப்பு மையமாக உதகை குதிரை பந்தய மைதானம் மட்டுமே உள்ளது. இது சதுப்பு நிலப்பகுதியாகும். பருவநிலை மாற்றம், எதிர்கால சந்ததியினரின் நலனை கருதி கருத்திற் கொண்டு குதிரை பந்தய மைதானத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும்.
குதிரை பந்தய மைதானத்தில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. உதகையின் முக்கிய
சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ஏரி, ரோஜா பூங்கா ஆகியவை தொலைவில் உள்ளன. அந்தந்த பகுதிகளில் மல்டி
லெவல் பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். உதகையின் நுரையீரலாக இருக்கும் குதிரை பந்தய மைதானத்தை சிதைக்க வேண்டாம்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.