தமிழகம்

தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட போரூர் ஏரி நிலம் அரசால் மீட்கப்படுமா? - உத்தரவு ஏதும் வரவில்லை என திருவள்ளூர் ஆட்சியர் தகவல்

வி.சாரதா, சி.கண்ணன்

தனியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்ட போரூர் ஏரி நிலத்தை மீட்பது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஏரி களில் ஒன்றான போரூர் ஏரி, தற்போது சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நான்கு கிணறுகளில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்தால் நீர் எடுக்கப்பட்டு, கே.கே.நகர் நீர் பங்கீட்டு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

800 ஏக்கர் பரப்பளவு

போரூர் ஏரி சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்ததாகவும், நாளடைவில் அது சுருங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏரியின் 17 ஏக்கர் பரப்பு, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு 1987-ம் ஆண்டு வழங்கப்பட் டது. ஏரிக் கரையோரத்தில் அவ்வப்போது சில ஆக்கிரமிப்புகளும் நடந்துள்ளன. 2006 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஏரிக் கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கரைகளை பலப்படுத்த

இந்நிலையில், போரூர் ஏரியின் கரைகளை பலப்படுத்தி கொள்ளளவை 46 மில்லியன் கன அடியிலிருந்து 70 மில்லியன் கன அடியாக உயர்த்துவதற்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியது. இதையடுத்து, ஏரியில் கரை அமைப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மண் கொட்டி வருகின்றனர்.

ராமச்சந்திரா பல்கலைக்கழகத் துக்கு வழங்கப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற்று, அந்த இடத்தையும் சேர்த்து கரை அமைக்க வேண்டும் என சில சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.பீம்ராவ் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சென்னை மற்றும் போரூரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான போரூர் ஏரியை காப்பாற்ற வேண்டும்.

ஏரியின் ஒரு பகுதி தனியாருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் நலன் கருதி அதனை திரும்ப பெறுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பிரிவு IV-1-ன் கீழ் அதிகாரம் உண்டு. முறையான ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் தனியாருக்கு வேண்டிய இழப்பீட்டை கொடுத்துவிட்டு ஏரி நிலத்தை மீட்பதுதான் அரசு செய்ய வேண்டிய காரியம். ஏற்கெனவே போரூர் ஏரியிலிருந்து ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்துக்கு மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர். சென்னை நகரின் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ள நிலையில், போரூர் ஏரியை முழுமையாக மீட்டு, வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

ஆட்சியர் விளக்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் கேட்டபோது, ‘‘எம்எல்ஏ அளித்த மனுவை இன்னும் பார்க்கவில்லை. ஆனால், பட்டா நிலத்தை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை. அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கும்போது, அதற்கு உரிய இழப்பீட்டை கொடுப்போம். போரூர் ஏரியில் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கான இடம் குறித்து தமிழக அரசிடமிருந்தோ, பொதுப்பணித் துறையிடமிருந்தோ எந்த உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை’’ என தெரிவித்தார்.

பொதுப்பணித் துறையின் நீர் வளத்துறை அதிகாரி கூறும்போது, ‘‘ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துக்கு 17 ஏக்கர் மட்டுமே சொந்தமானது. ஆனால், அவர்கள் கூடுதலாக 15 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதை மீட்பதற்காக கரை அமைத்து வருகிறோம். கரை அமைப்பது, வேலி அமைப்பது, ஏரியை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன’’ என்றார்.

பல்கலை. நிர்வாகம் பதில்

இது தொடர்பாக ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘ஏரியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அது பட்டா நிலம்’’ என்றனர்.

போரூர் ஏரி சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்ததாகவும், நாளடைவில் அது சுருங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏரியின் 17 ஏக்கர் பரப்பு, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு 1987-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT