கோயம்புத்தூர்
கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கே பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, கோவைக்கு வந்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணண் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநகரில் சோதனை மேற்கொள்ளப்படும் இடங்களைப் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து சுமித் சரண் இன்று செய்தியாளர்ளிடம் கூறும்போது,"பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனத் தணிக்கை, போலீஸார் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் பிடிபடவில்லை. சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படம் என எதையும் நாங்கள் வெளியிடவில்லை. சிறப்புக் காவல் படையினர், அதி விரைவுப் படையினர் , மாநகரப் போலீஸார் என மொத்தம் 2 ஆயிரம் பேர், கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவை கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு தகவல் தெரிவிக்கப்படுள்ளது'' என்றார்.