தமிழகம்

கழிவறையே வீடான பரிதாபம்: 14 ஆண்டுகளாக வேதனையை அனுபவிக்கும் மதுரை மூதாட்டி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை,

மதுரை அருகே 70 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆண்டுகளாக கழிவறையையே வீடாக்கி வசிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, தூங்கி எழுகிறார் என்ற அவலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டிலேயே பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பெருமையுடன் அறிவித்த திட்டம் ‘எல்லருக்கும் வீடு திட்டம்’,

ஆனால், இந்தத் திட்டம் இன்னும் வீடு இல்லாத ஏழைகளைச் சென்றடையவில்லை என்பதற்கு மதுரையில் கடந்த 14 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் 70 பெண் கருப்பாயி சிறந்த உதாரணம்.

இவர் மதுரை மாவட்டம் பனையூர் ரெட்டக்குளத்தை சேர்ந்தவர். இவரது கணவர் திருஞானம். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. கணவரும் இறந்து விட்டதால் சொந்த வீடும் இல்லாததால் வாழ்வாதாரத்தை தேடி கருப்பாயி மதுரை நகர் பகுதிக்கு வந்துள்ளார்.

வந்த இடத்தில் எந்த வேலையும் கிடைக்காததால் அனுப்பானடியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாக கழிப்பிறை அறையில் தங்கியுள்ளார். அதன்பிறகு அங்கேயே நிரந்தரமாக தினமும் தூங்கி எழுந்து, அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவரே தினமும் அந்த சுகாதார வளாக கழிப்பிட அறைகளை சுத்தம் செய்து பராமரிக்கத் தொடங்கி உள்ளார். அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தும் அந்த ஊர் மக்கள், இந்த பெண்ணின் மீது இரக்கம் ஏற்பட்டு ஒவ்வொருவரும் 4 ரூபாய், 5 ரூபாய் கொடுத்து வந்துள்ளனர்.

அந்த பணத்தில் காய்கறி, அரிசி வாங்கி கழிப்பறையிலே சமைத்து சாப்பிட்டு அங்கேயே தினமும் தூங்கி எழுந்து வருகிறார்.

அவரைப்பற்றி அந்த ஊர் மக்களிடம் விசாரித்தபோது, "ஆரம்ப காலத்தில் கருப்பாயின் கணவர் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். நல்ல வருமானமும் கிடைத்துள்ளதால் நல்ல வசதியாகவே வாழ்ந்துள்ளனர்.

லாட்டரி சீட்டுக்கு தடை வந்ததால் இவரது கணவர் வருமானம் இல்லாமல் மாற்று தொழிலுக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்டார்.

பெற்ற பிள்ளையும் கைவிட்டதால் சாப்பாடுக்கு வழியில்லாமல் வசிக்க வீடும் இல்லாமல் கருப்பாயி மதுரைக்கு பிழைப்பு தேடி வந்த இடத்தில் இந்த கழிவறையிலே வசிக்கிறார்" என்றனர்.

சுகாதார வளாக கழிப்பறை நுழைவு வாயில் பகுதியை வீடாக்கி அங்கு தன்னுடைய சமையல் பாத்திரங்கள், துணிகளை அடுக்கி வைத்துள்ளார். கருப்பாயிடம் பேசியபோது ‘‘கட்டிய புஷசனும் இறந்துவிட்டார். பெற்ற பிள்ளையையும் காணவில்லை.

நாடோடிபோல் சுற்றிதிரித்த எனக்கு இந்த ஊர் மக்கள்தான் அடைக்கலம் கொடுத்தாங்க. அவங்க பயன்படுத்தும் கழிவறையை நான் சுத்தப்படுத்தி கொடுப்பதால் செலவுக்கு காசு கொடுக்குறாங்க. ஒரு நாளைக்கு 20 முதல் 30 பேர் வரை இந்த கழிவறையைப் பயன்படுத்துகின்றனர்.

யாரிடமும் காசு கொடுங்கள் என்று கேட்கமாட்டேன். அவங்க கொடுக்கும் காசை வாங்கிக்கிவேன். அக்கம், பக்தக்தில் சாப்பாடு கிடைத்தால் வாங்கி சாப்பிடுவேன்.

கிடைக்காத சமயத்தில் ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுவேன். வீடுகளில் அடைப்பு சாக்கடைகளையும் சரி செய்வேன், ’’ என்றார். கருப்பாயி வீடாக பயன்படுத்தும் இந்த ஒருங்கிணைந்த சுகாதார வளாக கழிப்பிட அறை கடந்த 2004-2005ம் ஆண்டில் ‘வாம்பே’ திட்டத்தில் கட்டப்பட்டது.

மாவட்ட நிர்வாகம், கழிவறையில் வசிக்கும் இந்தப் பெண்ணை மீட்டு அவருக்கு வசிக்க வீடும், முதியோர் உதவித்தொகையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT