சென்னை
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி: ஞான நூலான பகவத் கீதையின் மூலம் வாழ்வின் நெறிமுறைகளை உலகுக்கு எடுத்துரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம்தோறும் பிறக்கிறேன்’ என்று உரைத்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வண்ணக் கோலமிட்டு, பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை இறைவனுக்குப் படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சுக் காலடிகளை மாவில் நனைத்து, இல்லங்களின் வழிநெடுக பதித்து, கிருஷ்ண பகவானே தங்களது இல்லங்களுக்கு வந்தருளிய தாக பாவித்து போற்றி வணங்குவர்.
பகவான் கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், உலகில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும், வளங்களோடும் வாழ வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தீமைகளை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டு வதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில் அனை வருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல், தெளிந்த தண்ணீரைப் போல மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெற்று, மனநிம்மதியோடு வாழலாம்’ என்று கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை எப்போதும் நினைவில் கொண்டு இலக்குகளில் வெற்றிகளைக் குவித்திடுவோம்.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அறம் காத்து நின்று, அதர்மத்தை வீழ்த்தி, தர்மத்தை நிலைநிறுத்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: நியாயம், தர்மம், இவற்றைக் கடைபிடித்து, மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வாங்கு வாழ வகை செய்யும் நன்னாளாக கிருஷ்ண ஜெயந்தி திகழும் என்ற வகையில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்கள் கல்வி முன் னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோரும் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.