மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

ப.சிதம்பரத்தை கைது செய்த முறை இந்தியாவுக்கே அவமானம்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை

சிபிஐ அதிகாரிகள் சுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்திருப்பது இந்தியாவுக்கே அவமானம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், " இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. கிட்டத்தட்ட 20 முறை, சிபிஐ அழைத்த நேரங்களில் நேரடியாக சென்று ப.சிதம்பரம் பதில் அளித்திருக்கிறார். முன்ஜாமீன் கோரி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

அவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. அதனிடையே சிதம்பரத்தை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது கண்டிக்கத்தக்கது. சிபிஐ அதிகாரிகள் சுவரேறி ப.சிதம்பரத்தை கைது செய்ததை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். சிபிஐ அதிகாரிகள் சுவரேறி குதித்திருப்பது இந்தியாவுக்கே அவமானம். அது கண்டிக்கத்தக்கது", என பதிலளித்தார்.

இதையடுத்து, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பெரும் தலைகுனிவு என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அவர் ஒரு ஜோக்கர். அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது" என ஸ்டாலின் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT