மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

காஷ்மீர் விவகாரம்: டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு ஸ்டாலின் நன்றி

செய்திப்பிரிவு

சென்னை

டெல்லியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட காஷ்மீர் விவகாரத்துக்கான அனைத்துக்கட்சி கண்டன ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது, கலந்துக்கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காஷ்மீரில் அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இன்றுவரை அம்மாநில முன்னாள் முதல்வர்கள் வீட்டுக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிராக டெல்லியில் இன்று (ஆக.22) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இன்று டெல்லியில் திமுக முன்னின்று நடத்திய அனைத்துக் கட்சி மக்களவை உறுப்பினர்கள், தலைவர்கள் பங்கேற்ற, காஷ்மீர் விவகாரத்திற்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்திட வேண்டும் என்பது இதன் நோக்கம். அதேநேரத்தில் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கான சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் அழைப்பை ஏற்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், மக்களவை உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கின்றனர். வெற்றிகரமான ஆர்ப்பாட்டமாக இது அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்பதற்காக திமுக வழக்குத் தொடுக்கவில்லை. முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடரப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் திமுக அல்ல, திமுக தொடுத்த வழக்கு அல்ல. உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் வழக்குத் தொடுத்தோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT