தமிழகம்

இணைந்த கைகளே வெற்றிக்கு வித்திடும்!- கோவை தொழில்துறை பிதாமகன் ஏ.வி.வரதராஜன்

செய்திப்பிரிவு

ஆர்.கிருஷ்ணகுமார்

தனி ஒருவரின் உழைப்பைக் காட்டிலும், ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதே வெற்றியைத் தேடித் தரும்” என்கிறார் கோவை தொழில்துறையின் பிதாமகன் என்று போற்றப்படும் ஏ.வி.வரதராஜன்(84). ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த இவரது கடின உழைப்பும், முயற்சியும் தொழில் துறையில் உச்சத்தை அடையச்செய்தது. கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தின் ஆதாரத் தூணாகத் திகழும் இவரது முயற்சியின் பலன் `கொடிசியா’ தொழிற்காட்சி வளாகம். இந்தியாவிலேயே ஒரு தனி அமைப்புக்குச் சொந்தமாக, பிரம்மாண்டமான தொழிற்காட்சி வளாகமாகத் திகழ்கிறது இவ்வளாகம். இந்த வயதிலும் இளைஞரைப்போல பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஏ.வி.வரதராஜனை சந்தித்தோம்.
“பூர்வீகம் அப்பநாயக்கன்பட்டி, சூலூர் அருகேயுள்ள சின்னஞ்சிறு கிராமம். பெற்றோர் வெங்கிடசாமிநாயுடு-அம்மணி அம்மாள். அப்பநா யக்கன்பட்டி போர்டு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்தேன். முதல் வகுப்பு மணலில் எழுதிப் பழகினேன. இரண்டாம் வகுப்பிலிருந்து சிலேட்டில் எழுதினேன். பொங்கலூரில் சித்தப்பா வீட்டில் தங்கி, 5-ம் வகுப்பு படித்தேன்.

காந்தி தரிசனம்!

ஒருமுறை பழனி முருகன் கோயிலுக்கு சித்தாப்பாவுடன் சென்றேன். அந்த சமயத்தில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்ற மகாத்மா காந்தி, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு காரில் வந்துகொண்டிருந்தார். வழியில் சூழ்ந்திருந்த மக்கள் வெள்ளத்துக்கு நடுவில், அந்தக் கார் ஊர்ந்து சென்றது. அப்போது, காந்தியைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தில், அந்தக் காரின் படியில் ஏறிக்கொண்டேன். இதனால், காந்தியை மிக நெருக்கமாக பார்க்க முடிந்தது. பின்னர், அங்கிருந்த போலீஸார், மக்களும் என்னைக் காரில் இருந்து இறக்கிவிட்டனர்.

தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு, லட்சுமி நாயக்கன்பாளையத்தில் உள்ள எஸ்.ஆர்.என்.வித்யாலயம் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம்வகுப்பு வரை படித்தேன். வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால், அங்குள்ள பாரதிவாசக சாலை படிப்பகம் சென்று, அங்கு கொண்டிருக்கும் லஸ்தர் விளக்கு வெளிச்சத்தில், நண்பர்களுடன் அமர்ந்து படிப்பேன். கணக்குப் பாடத்திலும், கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம்மிகுந்து இருந்தது. மேலும், பள்ளி அசெம்பளியில் செய்திகள் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பநாயக்கன்பட்டியிலிருந்து ஏறத்தாழ 6 கிலோமீட்டர் தொலைவுக்கு மூன்று ஆண்டுகள் நடந்து சென்றேன். பின்னர்
அப்பா ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். கரடுமுரடான பாதையில் செல்லும் சைக்கிள்கள், ஓரிரு நாட்களிலேயே பஞ்சராகிவிடும். இதனால் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

`பஞ்சர்’ சங்கம்!

இதற்கு தீர்வுகாணும் வகையில், 150-க்கும் மேற்பட்டோர், ஆளுக்கு 25 பைசா போட்டு, தனியாக பஞ்சர் ஒட்டுபவரை நியமித்து, மாணவர்களின் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டோம். இதற்காக உருவான சைக்கிள் சங்கத்துக்கு ஆசிரியர் ரங்கசாமி தலைவராகவும், நான் செயலராகவும் பொறுப்பு வகித்தோம். அதேபோல, 10-ம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏ.வி.சீனிவாசலுநாயுடு தோட்டத்தில் பணியாற்றுபவர்களின் வருகைப்பதிவேட்டை பராமரிப்பது, வாரந்தோறும் சம்பளத்தைக் கணக் கிட்டு வழங்குவது உள்ளிட்ட வேலைகளையும் செய்தேன். பஞ்சம் வந்தபோது, கிராமத்தில் கஞ்சித் தொட்டி திறந்தார்கள். எத்தனை பேர்கஞ்சி குடித்தார்கள், எவ்வளவு மாவு செலவானது, இருப்பு என்ன என எல்லா விவரங் களையும் எழுதிவைத்திருந்தேன். சில நாட்களுக்குப் பின் வந்த துணை ஆட்சியர், நான் எழுதிவைத்திருந்த பட்டியலைப் பார்த்து, வெகுவாகப் பாராட்டினார்.

கைகொடுத்த ஜிஆர்டி...

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர், பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தேன். வீட்டின் வறுமை காரணமாக, இன்டர்மீடியட் முடிப்பதற்குள்ளாகவே மிகுந்த சிரமம் ஏற்பட்டது. படிப்பு முடித்தவுடன் வேலைக்காக ஒருவரிடம் சிபாரிசுக் கடிதம் பெற்றுக்கொண்டு, பிஎஸ்ஜி கல்லூரி முதல்வர் ஜி.ஆர்.தாமோதரனை சந்தித்தேன். எனது மதிப்பெண்ணைக் கேட்ட அவர், “ஏன் மேற்கொண்டு படிக்கவில்லை?” என்றார். எனது ஏழ்மை நிலையை விளக்கியபோது, “நான் உதவி செய்கிறேன், படிக்கத் தயாரா?” என்று கேட்டார். அந்த கல்வியாண்டில் பல மாதங்கள் கடந்துவிட்டதால், அடுத்த ஆண்டு படிக்கிறேன் என்றேன். இதையடுத்து, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கேன்டீனை பார்த்துக்கொள்ளும்படி கூறினார். நானும் கேன்டீனில் பணிபுரியத் தொடங்கினேன். மாதம் ரூ.30 சம்பளம் கிடைத்ததுடன், சாப்பாடும், தங்குமிடமும் கிடைத்துவிட்டது. அப்போது கேன்டீன் பொறுப்பாளராக இருந்தவர் வேதியியல் பேராசிரியர் டிகேபி.வரதராஜன்.

அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேன்டீன் வரவு-செலவு கணக்கு, பேலன்ஸ்ஷீட் ஆகியவற்றை தயாரித்து, ஜி.ஆர்.டி.யிடம் ஒப்படைத்தபோது, அசந்துபோய்விட்டார். மே மாத கடைசியில் என்னை அழைத்து பி.இ. படிக்கும் வாய்ப்பை வழங்கினார். அதுமட்டுமல்ல, உடைகள், பெல்ட் வாங்க ரூ.300 கொடுத்தார் ஜிஆர்டி. அதுமட்டுமின்றி, மாணவர் கூட்டுறவு ஸ்டோரில் பகுதிநேர வேலையும் கொடுத்து, மாதம் ரூ.20 சம்பளமும் கொடுத்தார்” என்று கூறிய ஏ.வி.வரதராஜன், அங்கு சுவரில் மாட்டியிருந்த ஜிஆர்டி படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார். தொடர்ந்து அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.

தொழிற்சாலை பணி...

“பி.இ. முடித்த பின்னர் அரசு வேலை உட்பட பல வேலைவாய்ப்புகள் வந்தபோதும், பிஎஸ்ஜி கல்லூரியில் பணிபுரியவே விரும்பினேன். மீண்டும் ஜிஆர்டி-யை சந்தித்தபோது, “வொயிட் காலர் ஜாப்தான் வேண்டுமா? தொழிற்சாலையில் பணிபுரிய மாட்டாயா?” என்று கேட்டபோது, “எங்கு வேண்டுமானாலும் பணிபுரியத் தயார்” என்றேன். இதையடுத்து, பிஎஸ்ஜி வார்ப்பு இரும்பு தொழிற்சாலையில் பயிற்சியாளராக சேர்ந்து, இளநிலைப் பொறியாளர், உதவிப் பொறியாளர் நிலைக்கு உயர்ந்தேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நான் உள்ளிட்ட பலரையும் வேலையிலிருந்து நிறுத்தினார்கள்.

பின்னர், பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் வேலை கேட்டுச் சென்றபோது, குறைந்த சம்பளமே கொடுப்பதாக கூறினார்கள். “நீங்கள் கூறும் சம்பளத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். உற்பத்தியை பல மடங்கு உயர்த்திக் காட்டுகிறேன். அதேசமயம், உங்கள் நிறுவனத்தில் ஒரு பார்ட்னராக என்னை சேர்த்துக் கொள்வீர்களா?” என்று கேட்டேன். அதிர்ச்சியடைந்த அந்நிறுவன முதலாளி, “இதுவரை யாரும் என்னிடம் இப்படி கேட்டதில்லை” என்று கோபமாக கூறினார். இதனால் நான் அங்கு பணியில் சேரவில்லை. பெங்களூரு கடைத் தெருவில் சுற்றியபோது, கழிப்பறைகளுக்கான `ஃப்ளஷ் டேங்க்’ விற்பதைப் பார்த்து, ஒரு கடையில் அதுகுறித்து விசாரித்தேன். அந்தக் கடைக்காரர் பொறுமையுடன் பேசி, ஃப்ளஷ் டேங்க் குறித்து விளக்கினார்.

தொழில்முனைவோரான ஏவிவி...

பின்னர், கோவை திரும்பி, சிந்தாமணிப்புதூரில் 20 சென்ட் இடத்தை வாடகைக்கு எடுத்து, பங்குதாரர் ஒருவருடன் இணைந்து, ஃப்ளஷ் டேங்க் உருவாக்கத் தொடங்கினேன். பின்னர், காஸ்டிங் இயந்திரங்கள் உற்பத்தியையும் தொடங்கினேன்.

திருச்சியில் செயல்பட்ட பொதுத்துறை நிறுவனமான `பெல்’ நிறுவனம், தங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை செய்துகொடுக்கும் சிறு தொழிலகங்களைத் தேடினர். ஏறத்தாழ 90 பேர் விண்ணப்பித்ததில், நான் உள்ளிட்ட 3 பேர் மட்டும் `பெல்’ நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டோம். `வெர்ட்டிகள் போரிங்’ போன்ற பெரிய இயந்திரங்களை நிறுவி, பெல் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை செய்துகொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தொழில் விரிவடைந்தது.

பெல் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்தபோது, அந்நிறுவன அதிகாரிகள் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். இது பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பொறியியல் பாகங்கள், வாகன உதிரி பாகங்கள் என தொழில் விரிவடைந்தது.

எனது தொழில் வளர்ச்சிக்கு, தம்பி ஏ.வி.ரங்கநாதன் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினார். 1964-ல் திருமணம் நடைபெற்றது. மனைவி மாணிக்கம். தற்போது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன், பொன்னுதுரை, தம்பி மகன்கள் சரவணன், சந்திரமோகன் ஆகியோர் எங்களது நிறுவனங்களை அடுத்தகட்டத்தை நோக்கி கொண்டுசென்றிருக்கிறார்கள்” என்றார் பெருமிதத்துடன் ஏ.வி.வரதராஜன்.
சேண்ட்ஃபிட்ஸ் ஃபவுண்டரீஸ், ப்ரொபெல் இண்டஸ்ட்ரீஸ், புல் மெஷின்ஸ், புல் அக்ரோ, எஸ்.என்.எஃப். காம்பணன்ட்ஸ் உள்ளிட்ட இவரது நிறுவனங்கள், தேசிய அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு பல்வேறு இயந்திரங்களை உருவாக்குகின்றன. இந்திய தொழில்நுட்பத்தில் பொக்லைன் இயந்திரங்களை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். எம்.சாண்ட் தயாரிக்கும் இயந்திரங்கள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், கான்கிரீட் கலவை இயந்திரங்கள், வேளாண்மை இயந்திரங்கள் என பல வகைப்பட்ட இயந்திரங்களை உருவாக்குகின்றனர்.

கொடிசியாவில்...

“இந்தியாவில் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நகரம் கோவை. கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் தொழில்முனைவோர். கோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) 1969-ல் தொடங்கப்பட்டபோது, நான் அதில் இணைந்தேன். இணைச் செயலர், செயலர், துணைத் தலைவர் என பல பதவிகளை வகித்தேன். 1982-ல் தொழில்முனைவோர் கண்காட்சி நடத்தியபோது, கண்காட்சித் தலைவராக நான் பொறுப்பு வகித்தேன். ஏறத்தாழ 850 சிறு, குறுந் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள், 2 ஆயிரம் மாதிரி தொழில்திட்டங்கள் என பிரம்மாண்டமான முறையில் கண்காட்சியை நடத்தினோம்.
தொழில்முனைவோர் மேம்பாட்டு முகாம்கள், கண்காட்சிகள், தொழில் சுற்றுலா, சர்வதேச தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல் என தொழில்முனைவோரின் மேம்பாட்டுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.

`இன்டெக்’ தலைவர்!

1988-ல் தென்னிந்தியாவில் முதல்முறையாக `இன்டெக்’ தொழிற்கண்காட்சியை பிஎஸ்ஜி மைதானத்தில் நடத்தினோம். தொடர்ந்து 1991, 1994, 1997-ல் `இன்டெக்’ தொழிற்கண்காட்சியை நடத்தினோம். இவை நூற்றுக்கணக்கான புதிய தொழில்முனைவோர் உருவாக வழிவகுத்தன.

அதேசமயம், மைதானத்தில் தொழிற்கண்காட்சிகள் நடத்துவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன. பல நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொண்டதால், கொடிசியாவுக்கு என சொந்தமாக ஒரு நிரந்தர தொழிற்காட்சி வளாகம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. இதற்காக 40 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். பல்வேறு சவால்களைத் தாண்டி, கட்டிட வேலைகளைத் தொடங்கினோம். பல வங்கிகள் கடன் வழங்க மறுத்த நிலையில், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) கைகொடுத்தது.

1.35 லட்சம் ச.அடியில் தொழிற்காட்சி வளாகம்!

ஏறத்தாழ 1.35 லட்சம் சதுர அடியில், சர்வதேச தரத்துடன் `கொடிசியா’ தொழிற்காட்சி வளாகம் குறுகிய காலத்தில் உருவானது. திறப்பு விழாவுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு வந்த ஜெர்மனி தூதர், எப்போது திறப்பு விழா என்றார். அந்த நாளைக் கூறியதும், “நீங்கள் குறிப்பிட்ட நாட்களில் பணியை முடித்துவிட்டார், அது மிகப் பெரிய அதிசயம்” என்றார். எங்கள் குழு இரவு பகலாக உழைத்து, குறிப்பிட்ட நாளில் பணியை முழுமையாக முடித்தது. திறப்பு விழாவில் பங்கேற்ற ஜெர்மனி தூதர், இதைக் குறிப்பிட்டு, கொடிசியா நிர்வாகிகளை மனதாரப் பாராட்டினார்.

யாராலும் நம்ப முடியாத வகையில், 160 நாட்களில் தூண்களே இல்லாத கட்டியமாய் உருவானது கொடிசியா தொழிற்காட்சிவளாகம். இதன் பின்னணியில் கொடிசியா உறுப்பினர்களின் உழைப்பும், வியர்வையும், ரத்தமும் கலந்திருக்கிறது.

2000-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய கொடிசியா தொழிற்காட்சி வளாகம்தான், இப்போதுவரை தனியார் அமைப்பு உருவாக்கிய, பிரம்மாண்டமான தொழிற்காட்சி வளாகமாகத் திகழ்கிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உட்பட ஏராளமான கண்காட்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகத் திகழ்கிறது கொடிசியா தொழிற்காட்சி வளாகம்” என்கிற வரதராஜன், தற்போதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது, மிகப் பெரிய அளவில் தொழிற்பூங்கா வளாகத்தை உருவாக்கும் முயற்சியில் இவரும், கொடிசியா நிர்வாகிகளும் முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட வரதராஜனின் தொழிற்சாலைகளில், இதுவரை வேலைநிறுத்தமே நடந்ததில்லை என்பதே, அவரது தொழில் உறவின் மேன்மையைக் காட்டுகிறது. தொழில் பொறுப்புடன், சமூகப் பொறுப்பும் மிகுந்த இவர், கோவை நகரின் உட்கட்டமைப்புகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். 1998-ல் நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பின்போது, இயல்பு நிலை திரும்ப, அனைத்துத் துறையினருடனும் இணைந்து பணியாற்றியவர்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும்!

“கொடிசியாவின் வெற்றிக்குக் காரணம், அதன் உறுப்பினர்களின் அயராத உழைப்பும், கூட்டு முயற்சியும்தான். தொழில் துறையின் மேம்பாடுதான் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும்.

தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். புதிதாக தொழில் தொடங்கவும், தொழில் விரிவாக்கத்துக்கும் உதவ முன்வர வேண்டும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு இயந்திரங்கள், உபகரணங்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பயன்பாட்டை ஆதரிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பாட்டால், அப்துல்கலாமின் கனவை நனவாக்கலாம்” என்கிறார் நம்பிக்கையுடன் 84 வயது இளைஞர் ஏ.வி.வரதராஜன்.

பொதுத்துறை நிறுவனங்களே இல்லாத நிலையிலும், தொழில் துறையில் கொடிகட்டிப் பறக்கும் நகரம் கோவை. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகவும், நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றாகவும் திகழும் கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பலர். தனது ஓயாத உழைப்பால் சிகரங்களைத் தொட்டதுடன், தொழில், சமூக மேம்பாட்டுக்காக இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கும் ஏ.வி.வரதராஜனும் அதில் ஒருவர். கோவையில் அடையாளம் என சிலரை சுட்டிக்காட்டும்போது, நிச்சயம் அதில் ஏ.வி.வரதராஜனுக்கு இடமுண்டு!

SCROLL FOR NEXT