டி.ஜி.ரகுபதி
கோவை
கோவை மாநகரில் வரித்தொகை வசூலிக்கும் முறையை, மாநகராட்சி நிர்வாகத்தினர் நவீனப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் வரி செலுத்துபவர்கள் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். கட்டிடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப, அளவீடு செய்து சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டும், ஒரு குறிப்பிட்டத் தொகை இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்துவரித் தொகையில் சராசரியாக 93 முதல் 95 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
நடப்பு 2019-20-ம் நிதியாண்டில், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிலுவைத் தொகை சேர்த்தாமல் ரூ.271.79 கோடியும், நிலுவைத் தொகை சேர்த்து ரூ.410.16 கோடியும் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 29 வரிவசூல் மையங்களும், 54 வரிவசூலர்களும் உள்ளனர்.
இவர்கள், சொத்துவரி புத்தகம் கேட்டு விண்ணப்பிப்பவர்களின், கட்டிடங்களை அளவீடு செய்து வரித்தொகை நிர்ணயிப்பது, வரிவசூலிலை தீவிரப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். மாநகராட்சி சார்பில் இதுவரை நிரந்தர மற்றும் சிறப்பு வரிவசூல் மையங்கள் மூலம் மட்டுமே வரித்தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. மக்களிடம் நேரடியாக சென்று வசூலித்தது இல்லை. தற்போது வரிவசூலிக்கும் முறையை நவீனப்படுத்தி, வரிவசூலை அதிகப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
‘‘மாநகராட்சி வரிவசூலர்களுக்கு ஒரு ‘பிரத்யேக கையடக்கக் கருவி’ வழங்கப்படும். வரிவசூலிக்க பயன்படுத்தப்படும் மென்பொருள், அக்கருவியில் பதிக்கப்பட்டிருக்கும். வரிவசூலர்கள், பிரத்யேக கையடக்கக் கருவியை எடுத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று வரிவசூலில் ஈடுபடுவர்.
ரொக்கத் தொகை இல்லாவிட்டாலும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை மூலம் வரித்தொகை செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. வரித்தொகை செலுத்தியதற்கான சலானும் வழங்கப்படும்.
விரைவில் முதல் கட்டமாக, மாநகரின் ஒரு மண்டலத்தில் பரீட்சார்த்த முறையிலும், பின்னர் மாநகர் முழுவதும் செயல்படுத்
தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வு கடந்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு நிதியாண்டு சொத்துவரித் தொகை, கடந்தாண்டு செலுத்தப்பட்ட தொகைக்கும், உயர்ந்த தொகைக்கும் உள்ள வித்தியாசத் தொகை ஆகியவற்றை வரி செலுத்துபவர்கள் செலுத்த வேண்டும்,’’என மாநகராட்சி உயரதிகாரிகள் கூறினர்.
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது, ‘‘மாநகரில் நேற்றைய நிலவரப்படி நிலுவைத் தொகை சேர்த்தாமல் ரூ.42.42 கோடி, நிலுவைத் தொகை சேர்த்து ரூ.56.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வரிவசூலிக்கும் முறை நவீனப்படுத்தப்பட உள்ளது. வரிவசூலர்களுக்கு வரிவசூலில் ஈடுபட கையடக்க பிரத்யேக கருவி கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது.
இப்பணிக்காக 120 கருவி கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களும் அலைச்சல் இன்றி வரித்தொகையை செலுத்தலாம்,’’ என்றார்.