திருவாரூர்
திருவாரூர் நகர கூட்டுறவு வங்கி வாக்காளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள கமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கியில் 8 இயக்குநர் பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நகர கூட்டுறவு வங்கியில் மொத்தம் உள்ள 11 இயக்குநர்களுக்கு 2 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு திமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி மீதமுள்ள 8 இயக்குநர் பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், அதிமுக சார்பில் நிர்வாகக் குழுவில் தலைவராக இருந்த ஆர்.தட்சிணாமூர்த்தி தலைமையில் ஒரு அணியும், திமுக சார்பில் திருவாரூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.
தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக வாக்காளர் பட்டியலில் 15 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மு.கருணாநிதியின் நண்பர் மறைந்த தென்னன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டும் இதேபோல வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியின்றி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டதால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரியாக திருத்தம் செய்வதில்லை. மு.கருணாநிதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது பெருமையாக இருந்தாலும், ஆளுங்கட்சியினர் இறந்தவர்களின் பெயரை நீக்காமல், இத்தகைய வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.
எனவே, வருங்காலத்தில் வாக்காளர் பட்டியலை உரிய முறையில் திருத்தம் செய்து வெளியிட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.