சேலம்
விவசாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய இடங்களில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சேலம் ஆட்சியர் ராமன் வரவேற்றார். கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்திட, புதிய யுக்தியாக அதிகாரிகள் வார்டு வரை வந்து பொது மக்களிடம் மனுக்களை நேரில் பெறுவர். மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பெறப்படும் தகுதியான மனுக்கள் அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பெறப்பட்டுள்ள மனுக்களில் பெரும்பாலானவை முதியோர் உதவித்தொகை கேட்டு வந்துள்ளன. பட்டா மற்றும் பட்டா மாறுதல் கேட்டும் மனுக்கள் அதிக அளவில் வந்துள்ளன.
வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தில் இனி குடிசைகள் இல்லாமல் வீடுகள் இருக்க வேண்டும் என்பதே
எங்கள் லட்சியம். விவசாயிகளுக்கு வேளாண் தொழிலில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கச்செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் என அனைத்துத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
மழைநீர் வீணாகக் கூடாது
உடலுக்கு உயிர் போல, விவசாயத்துக்கு மழை நீர் முக்கியமானது. எனவே, ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகக் கூடாது என்று ஓடைகள், ஆறுகள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-19-ம் ஆண்டில் பரீட்
சார்த்தமாக தொடங்கப்பட்ட ஏரி குடிமராமத்துத் திட்டம் இன்று சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலமாக தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகளும் படிப்படியாக தூர் வாரப்படும்.
குடிமராமத்து திட்டம் இத்துடன் நின்றுவிடக்கூடாது. தூர்வாரப்பட்ட நீர்நிலைகளை அந்தந்த பகுதி விவசாயிகள் கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பராமரித்து பாதுகாத்திட வேண்டும். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். தமிழகத்தில் சுயஉதவிக் குழுக்கள் அதிகமுள்ள மாவட்டமாக சேலம் இருக்கிறது.
தலைவாசலில் அமைக்கப்படும் கால்நடை ஆராய்ச்சி மையம் இப்பகுதியில் மிகப்பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும். மேலும், விவ
சாயிகள் விளைவிக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்பனை செய்திட, தலைவாசலில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். இங்கு 100 ஏக்கரில் உணவுப் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.
இஸ்ரேல் பயணம் ரத்து
விவசாயிகளுக்கு மேலும் பல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதற்காக, இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கு தேர்தல் நடைபெறுவதால், பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டுப் பசு பரிசு
முன்னதாக, அபிநவம் ஏரிதூர்வாருவதை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கன்றுக்
குட்டியுடன் கூடிய காங்கேயம்நாட்டுப் பசு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அப்போது அபிநவம் ஏரியில் மிகச் சிறப்பாக தூர்வாரும்பணியை மேற்கொண்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
போலீஸார் அனுமதி மறுப்பு
முன்னதாக வாழப்பாடியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நிகழ்ச்சியில், 8 வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவ
சாயிகள் சுமார் 20 பேர் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அவர்களை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்துக்குள் செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிவுற்று அவ்வழியாக முதல்வர்பழனிசாமி காரில் வெளியேறினார். இதையறிந்த விவசாயிகள், ‘வேண்டாம் வேண்டாம் விவசாயத்தை அழிக்கும் 8 வழிச்சாலை வேண்டாம்’ என முழக்கமிட்டனர்.
பின்னர் போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.