சென்னை
தமிழகத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸை பலப் படுத்த வேண்டும் என்பதுதான் ராஜீவின் கனவு. 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அதன் பலனாக 1967-க்குப் பிறகு சரிந்திருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி, 20 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. காங்கிரஸின் வேர் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி யுள்ளது. அதைப் பயன்படுத்தி காங்கிரஸை பலப்படுத்த வேண் டும். வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும்.
பாஜகவும், அதிமுகவும் காங்கிரஸின் எதிரிகள். பாஜகவின் சித்தாந்தம் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. சிபிஐ, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அமைப்புகளை சிதைத்து பாஜக அரசு தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பாஜகவை எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு பழி வாங்கப்படுகின்றனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்குகூட குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அதிமுக அரசால் பெற முடிய வில்லை. எனவே. பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை கடுமை யாக எதிர்க்க வேண்டும். தமிழகத் தில் காங்கிரஸை வளர்க்க தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் பேசும்போது, ‘‘நாடு இன்று மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. காஷ்மீரில் மாநில உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. 144 தடையுத்தரவு போடப்பட்டு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி ஜனநாயகத்தைப் பாது காத்தார். ஆனால், இன்று பிரதமர் மோடி ஜனநாயகத்துக்கு ஆபத்தானவராக மாறிவிட்டார்.
கடந்த 2014 தேர்தலில் காங்கிர ஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வில்லை. ஆனால், இப்போது காங்கிரஸுக்கு 8 எம்.பி.க்கள் உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த வலிமை யான கூட்டணியே இதற்கு காரணம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெல்லும். மு.க.ஸ்டாலின் முதல்வராவார். வரும் காலங்களில் தேசிய அளவிலும் மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்" என்றார்.
சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்களவை உறுப்பினர்கள் எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.கே.விஷ்ணுபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் செய லாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், தேசிய செய்தித் தொடர் பாளர் குஷ்பு, மாநிலப் பொருளா ளர் நாசே ராமச்சந்திரன்,மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எம்.எஸ்.காமராஜ், விஜய் வசந்த், எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, மாவட்டத் தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், ரூபி ஆர். மனோகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.